தஞ்சாவூர் மாவட்டம் , சிங்கபெருமாள் குளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவில் தஞ்சை மேற்கு போலீசார் வாகன சோதனைகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்து கொண்டிருப்பதை போலீசார் பார்த்து, அந்த வாகனத்தை நிறுத்த முயன்றனர். ஆனால், அந்த கார் போலீஸ் எச்சரிக்கையை மீறி வேகமாக சென்றது. உடனே சுதாரித்துக் கொண்ட போலீசார் அந்த சொகுசு காரை துரத்திப் பிடிக்க இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். போலீசார் தொடர்ந்து விரட்டியதில் சீனிவாசபுரம் பகுதி அருகே அந்த வாகனத்தை மடக்கி நிறுத்தினார்கள்.
அப்போது அந்த வாகனத்தில் இருந்த இரண்டு நபர்கள் குடிபோதையில் இருந்ததுள்ளார்கள் என்று தெரிந்து கொண்ட போலீசார், அவர்களிடம் விசாரணையில் ஈடுபட்டார்கள். அந்த விசாரணையில் வாகனத்தில் இருந்தவர்கள் தஞ்சையை சேர்ந்த ஹரிபாபு, காரல் மார்க்ஸ் என்பது தெரியவந்துள்ளது. அந்த இருவரையும் போலீஸார் விசாரித்தபோது, அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவிவருகிறது.
அந்த வீடியோவில் காவலர், “வண்டிய நிப்பாட்டச் சொன்னா நிப்பாட்ட மாட்டீங்களா, எவ்ளோ தூரம் உங்களை துரத்திட்டு வர்றது” என்று கேட்டதற்கு, காரல் மார்க்ஸ் “யோவ் நான் எவ்ளோ சம்பளம் வாங்குறேன் தெரியுமா, நீ எவ்ளோ சம்பளம் வாங்குற” என்று பேசியுள்ளார். அதற்கு அந்த காவலர், “மரியாதையா பேசு” என்று கேட்டுள்ளார். ஆனால், காவலர்கள் மரியாதையாக பேச சொன்ன பிறகும் ஹரிபாபுவும், காரல் மார்க்ஸும் “நீ கவர்மெண்ட் சம்பளம் வாங்குற, யூனிபார்மை கழற்றிட்டு வா, அறுத்துடுவேன்” என்று மிரட்டியுள்ளனர். அதன்பிறகு ஆபாசமாக பேசிய அந்த இரண்டு நபர்களும் அங்கிருந்து வாகனத்தில் ஏறி புறப்பட்டு சென்றுவிட்டனர்.
இந்த சம்பவத்தை முழுவதுமாக அருகில் இருந்த மற்றொரு போலீசார் வீடியோவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தான் தற்போது வேகமாக பரவி வருகிறது. தற்போது அந்த வீடியோவை ஆதரமாக வைத்து தஞ்சை மேற்கு போலீசார் ஹரிபாபு மற்றும் காரல் மார்க்ஸ் ஆகியோரின் மீது வழக்கு பதிவு செய்து தீவிரமாக தேடி வந்த நிலையில், இருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இருவரும் பாஜகவைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.