மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை இன்று (செப். 7, 2019) பகலில் எட்டியது. 43வது முறையாக முழு கொள்ளளவை எட்டி சாதனை படைத்துள்ள நிலையில், ஏராளமான பொதுமக்கள் கடல்போல் நிரம்பியிருக்கும் அணையின் கண்கொள்ளா காட்சியை கண்டு ரசித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணை நீர்மட்டம் 100 அடியைத் தொட்ட நிலையில், கடந்த ஆகஸ்ட் 13ம் தேதியன்று டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணையைத் திறந்து வைத்தார். அப்போது நீர் வரத்து கணிசமான அளவில் இருந்ததால், அடுத்த சில நாள்களில் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டிவிடும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீரென்று கர்நாடகா மாநிலத்தில் மழைப்பொழிவு குறைந்ததால், நீர் வரத்தும் படிப்படியாக குறைந்தது.
அணையின் நீர்மட்டம் 117 அடியாக இருந்தபோது, நீர் வரத்தைக் காட்டிலும் பாசனத்திற்காக நீர் திறப்பது அதிகமாக இருந்தது. இதனால் அணை முழுவதும் நிரம்புவதில் மேலும் தாமதம் ஆகும் நிலை ஏற்பட்டது. இந்நிலையில், கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் பலத்த மழை பெய்து வருவதால், அங்குள்ள கேஆர்எஸ், கபினி அணைகள் நிரம்பின. இதையடுத்து பாதுகாப்பு கருதி அவ்விரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அதன்படி, நேற்று கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 52807 கனஅடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 22692 கன அடி தண்ணீரும் என மொத்தம் 75499 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்து சேர்ந்த இந்த தண்ணீர், ஒகேனக்கல் காவிரி வழியாக மேட்டூர் அணைக்கு தண்ணீர் வந்து சேர்கிறது.
இன்று (செப். 7, 2019) காலை 8 மணி நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 75 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அப்போது அணையின் நீர்மட்டம் 119.34 அடியாக இருந்தது. இந்நிலையில், பகல் 1.09 மணியளவில் மேட்டூர் அணை அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணை பரந்த கடல்போல் காட்சி அளிக்கிறது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று இரவு அணையையொட்டி தாழ்வான பகுதிகளில் குடியிருக்கும் குடும்பத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இது தொடர்பாக தண்டோரா மூலம் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அணைப்பகுதியில் நின்று கொண்டு அலைபேசியில் தற்படம் எடுக்கக்கூடாது என்றும் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேட்டூர் அணை 43வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இன்று காலை நிலவரப்படி, பாசனத்திற்காக அணையில் இருந்து வினாடிக்கு 32500 கன அடியும், கிழக்கு மேற்கு கால்வாய் வழியாக வினாடிக்கு 700 கன அடியும் என மொத்தம் 32700 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. தற்போது அணை முற்றிலும் நிரம்பியுள்ள நிலையில், நீர்வரத்து முழுவதும் அப்படியே பாசனத்திற்காக திருப்பி விடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடல்போல் காட்சி அளிக்கும் மேட்டூர் அணையை ஏராளமான பொதுமக்கள் நேரில் பார்ப்பதற்காக திரண்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.