தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள், கடைகள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு தேவையான மின்சாரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் விநியோகம் செய்து வருகிறது. வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் மின்சாரத்திற்கான கட்டணம் இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மின்சார வாரியம் சார்பில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிகமாக பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து டெபாசிட் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த தொகைக்கு மின்சார வாரியம் சார்பில் ஆண்டுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படுகிறது.
அந்த வகையில் சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சமீபத்தில் மின் கட்டணம் செலுத்த மின்சார அலுவலகத்திற்கு சென்றபோது கூடுதலாக டெபாசிட் தொகை செலுத்தக் கூறியுள்ளனர். இது குறித்து அந்த இளம்பெண் சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவித்து வீடீயோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. மேலும் மின்சார வாரியத்தின் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் முறை மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், கூடுதல் மின்சாரம் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களிடம் இருந்து டெபாசிட் தொகை வசூலிப்பதை தவிர்க்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மின்சாரத் துறை அதிகாரிகளுக்கு சமீபத்தில் அறிவுறுத்தி இருந்தார். இதையடுத்து பொதுமக்களிடம் இருந்து கூடுதல் டெபாசிட் தொகை வசூலிப்பதை மின்சார வாரியம் நிறுத்தியுள்ளது. மேலும், ஏற்கனவே மக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட டெபாசிட் தொகை அடுத்து வரும் மாதாந்திரக் கட்டணத்தில் இருந்து கழிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாரியத்தின் இந்த முடிவு மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.