சேலம் மாவட்டத்தில் 2020-2021ம் கல்வி ஆண்டில், தனியார் சுயநிதி பள்ளிகளில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இடஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது.
எல்கேஜி வகுப்பில் நிரப்பப்படாமல் காலியாக உள்ள இடங்களுக்கு இரண்டாம் கட்டமாகவும், வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளை சேர்க்க அக். 12- ஆம் தேதி முதல் நவம்பர் 7- ஆம் தேதி வரை rte.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை பள்ளியிலேயே இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அல்லது, அருகில் உள்ள வட்டார வள மையங்கள், வட்டாரக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணைய வழியில் பதிவேற்றம் செய்து, அதற்கான ஒப்புகை சீட்டினை பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்கும்போது, குழந்தைகளின் வயதை நிரூபிப்பதற்கான ஏதேனும் ஒரு சான்று பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியில் எல்கேஜி சேர்க்கைக்கு ஜூலை 31- ஆம் தேதியில் 3 வயது நிறைவடந்திருக்க வேண்டும். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவில் (ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலினத்தவர், ஹெச்ஐவியால் பாதிக்கப்பட்ட குழந்தை, துப்புரவு தொழிலாளியின் குழந்தை) விண்ணப்பிக்க உரிய அலுவலரால் வழங்கப்பட்ட சான்றினை பதிவேற்றம் செய்ய வேண்டும். இவர்களுக்கு குலுக்கல் நடத்துவதற்கு முன்னரே சேர்க்கை வழங்கப்படும்.
ஆண்டு வருமானம் 2 லட்சம் ரூபாய்க்குக் கீழ் உள்ள அனைத்துப் பிரிவினரும், நலிவடைந்த பிரிவினர் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்.இதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானச் சான்றிதழை வட்டாட்சியரிடம் பெற்று பதிவேற்ற வேண்டும்.
மனுதாரரின் இருப்பிடத்தில் இருந்து பள்ளி அமைவிடம் ஒரு கி.மீ. சுற்றளவுக்குள் இருக்க வேண்டும். இருப்பிடச் சான்றிதழ் மற்றும் சேர்க்கை பெறும் குழந்தையின் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.
மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்கள் மக்களிடையே சேரும் வகையில், அனைத்து சிறுபான்மையற்ற தனியார் சுயநிதி பள்ளிகளிலும் பிரதான நுழைவு வாயிலில் பள்ளி பெயர் பலகைக்கு அருகிலும், பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் 6க்கு 10 அடி என்ற அளவில் விவரங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட வேண்டும். சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.