திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கடைசி நாளான நேற்று முன்தினம் (16.12.2019) ஆளுங்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் போட்டிப்போட்டுக்கொண்டு வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.
தமிழகத்தில் ஊராட்சிப் பகுதிகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் வரும் 27ம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ம் தேதி தொடங்கியது. கடைசி நாளான நேற்று முன்தினம் (16.12.2019) தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் தங்கள் கூட்டணி கட்சிகளின் ஒதுக்கீடை பின்பற்றி நத்தம் ஒன்றியத்தில் உள்ள ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலம், மாநில செயற்குழு உறுப்பினர் விஜயன் உள்ளிட்ட கட்சியினருடன் வந்து வேட்புமனுவை அந்தந்த தேர்தல் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர். இதில் வடக்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு முத்துராஜ், தெற்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அழகு, ரெட்டியபட்டி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அ.தி.மு.க. சார்பில் மாநில அம்மா பேரவை இணை செயலாளரும், முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதனின் மருமகனுமான கண்ணன் முளையூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவருடன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் மகன் அமர்நாத், ஒன்றிய செயலளார் ஷாஜகான் உள்ளிட்ட கட்சியினர் வந்திருந்தனர்.
மேலும் இக்கட்சி சார்பில் வடக்கு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு சின்னக்கவுண்டரும், தெற்கு மவட்ட கவுன்சிலர் பதவிக்கு பார்வதி மணிகண்டனும் தாக்கல் செய்தனர். நத்தம் ஒன்றியத்திற்கான தேர்தல் வரும் 27ம் தேதி நடைபெறுகிறது.
ஒட்டன்சத்திரம் ஒன்றியத்தில் கடைசி நாளான நேற்று வரை மாவட்டக் கவுன்சிலருக்கு 9 பேரும், ஒன்றிய கவுன்சிலருக்கு 83 பேரும், தங்கச்சியம்மாபட்டி, கொ.கீரனூர், மண்டவாடி, சிந்தலப்பட்டி, விருப்பாட்சி, வேலூர், அன்னப்பட்டி அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, வடகாடு, இடையகோட்டை, லெக்கயன்கோட்டை, வடகாடு உள்ளிட்ட 35 ஊராட்சிகளுக்கான தலைவர்களுக்கு 200பேரும், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு 642 பேரும், தேர்தல் அலுவலர்களிடம் மனுத்தாக்கல் செய்தனர்.
ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் 15- வது வார்டு ஒன்றிய குழு உறுப்பினராக தி.மு.க. சார்பில் போட்டியிடும் தங்கராஜ் தேர்தல் அலுவலரிடம் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுத்தாக்கலின் போது ஒட்டன்சத்திரம் திமுக நகர செயலாளர் வெள்ளைச்சாமி, மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். கொடைக்கானல் ஒன்றிய கவுன்சிலருக்கு 59 பேரும், கிராம ஊராட்சித்தலைவர்களுக்கு 43 பேரும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு 5 பேரும் மனுத்தாக்கல் செய்தனர்.
வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய மாவட்ட கவுன்சிலருக்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. இறுதி பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் ஜோசப் ஆரோக்கியராஜ், ஜெயச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் வெளியிட்டனர். அதில் திமுக சார்பாக கனிக்குமார், அ.தி.மு.க சார்பாக அன்னம் களஞ்சியம், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக கணேசன், கஜேந்திரன், ஆரோக்கியசாமி ஆகிய மூன்று பேரும் அதுபோல் புதிய தமிழகம் கட்சி சார்பாக சரவணனும் நாம் தமிழர் கட்சி உள்பட மொத்தம் 11 பேர் போட்டியிடுகின்றனர்.
அதுபோல் திண்டுக்கல் ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளுக்கும் திண்டுக்கல் யூனியன் ஆபீசில் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். அதில் பள்ளபட்டி ஊராட்சித்தலைவர் பதவிக்கு தி.மு.க. வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் பரமன் மனுத்தாக்கல் செய்தார். அவருடன் மாயாண்டி, செல்லப்பாண்டி உள்பட கட்சி பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அதோடு ஒன்றியத்தில் உள்ள ஊராட்சித் தலைவர் பதவிக்கு மேலும் சிலர் வேட்புமனுத்தாக்கல் செய்தனர். இப்படி மாவட்டத்தில் உள்ள மற்ற பகுதிகளிலும் கடைசி நாளான நேற்று முன்தினம் (16.12.2019) விறுவிறுப்பாக வேட்புமனுத்தாக்கல் செய்தனர்.