சென்னையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், "ரெம்டெசிவிர் மருந்தைக் கள்ளச்சந்தையில் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் விற்பவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்படும். சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம். சென்னை, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் தொற்று பரவலைத் தடுப்பது சவாலாக இருக்கிறது. தமிழகத்தில் 18 வயதானவர்களுக்கு நாளை (01.05.2021) கரோனா தடுப்பூசி போடுவது சந்தேகமே. பற்றாக்குறையால் திட்டமிட்டபடி 18 வயதானவர்களுக்கு தடுப்பூசி போடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 1.5 கோடி தடுப்பூசிகள் ஆர்டர் கொடுத்திருந்தாலும், அவை எப்போது வந்து சேரும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. தடுப்பூசிகள் வருகை குறித்த தகவல் கிடைக்கப் பெற்ற பின்தான் தடுப்பூசி முகாம்கள் குறித்து முடிவு செய்யப்படும்.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி ஏற்கனவே கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது. '104' என்ற எண்ணை தொடர்புகொண்டு கரோனா குறித்த சந்தேகங்களைக் கேட்டு பொதுமக்கள் தெளிவு பெறலாம். இரண்டு நாட்களில் ரெம்டெசிவிர் மருந்துக்கான கொள்முதல் அதிகரிக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.