வீடுகளில் கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளவர்கள் சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் பாதிப்பு இருந்தால் உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் வேகம் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் அதிகளவில் இருக்கிறது. வைரஸ் பரவலில் இருந்து காத்துக்கொள்ளும் வகையில் தனிமைப்படுத்தல், சமூக விலகல் உள்ளிட்ட விதிகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.
இந்நிலையில், சேலம் மாவட்டத்தில் இதுவரை 14 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. மாவட்டம் முழுவதும் வெளிநாட்டுக்குச் சென்று திரும்பியவர்கள், டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள், இந்தோனேஷிய மத போதகர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என 25000க்கும் மேற்பட்டோர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், மாவட்டம் முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட விவரங்கள் வீடு வீடாகச் சென்று சேகரிக்கப்பட்டு உள்ளன.
இதுகுறித்து சேலம் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ''கரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் வசித்த பகுதிகளில் இதுவரை 1500- க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எக்காரணம் கொண்டும் வெளியில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் தங்களுக்கு சளி, காய்ச்சல், மூச்சுத்திணறல் உள்ளிட்ட பாதிப்புகள் இருந்தால் அதைப்பற்றி உடனடியாக சுகாதாரத்துறை அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும்,'' என்றனர்.