Skip to main content

“கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்காது” - அமைச்சர் ஐ. பெரியசாமி

Published on 21/07/2023 | Edited on 21/07/2023

 

TamilNadu Govt will never allow to build Meghadatu Dam say i Periyasamy

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்தூர் தொகுதியில் இருக்கும் தாடிக்கொம்பு மற்றும் அகரம் பேரூராட்சியில் உள்ள காமாட்சிபுரம் கொண்ட சமுத்திரப்பட்டி, சுக்காம்பட்டி, கருங்கல்பட்டி, மேல் கரையான் புதூர், பெரிய மல்லனம்பட்டி உள்பட சில ஊர்களுக்குத் தார் சாலை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளுக்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அடிக்கல் நாட்டித் தொடங்கி வைத்தார். 

 

இதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, “திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. தாடிக்கொம்பு பேரூராட்சியில் சுமார் 6 கோடி மதிப்பீட்டிலான திட்டப்பணிகள் தொடங்கி வைக்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக தாடிக்கொம்பு பேரூராட்சியில் 100 நாள் வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இது முழுமையாக தமிழக அரசின் நிதி ஒதுக்கீட்டிலிருந்து செயல்படுத்தப்படுகிறது. திண்டுக்கல் பாலகிருஷ்ணாபுரம் பாலப்பணிகளை முழுமையாக நிறைவேற்றி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் உத்தரவின்படி, தமிழகத்தில் சாலை மேம்பாட்டுத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டில் சாலை வசதிகள், தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்திடவும், குடிநீர் வசதி முழுமையாக வழங்குவதற்கு ஒரு பெரிய திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலமாக பொதுமக்களுக்கு அதிகபட்சமாகக் குடிநீர் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. செங்கல் தயாரிப்புத் தொழில் உட்பட பல்வேறு தொழில்களில் ஈடுபடும் தொழிலாளர்களின் கைரேகைகள் மறைந்து விடுவதால், நியாயவிலைக் கடைகளில் கைரேகைப் பதிவு மூலம் அவர்கள் பொருட்கள் பெறுவதில் சிரமங்கள் ஏற்படுகின்றன. இந்தச் சிரமங்களைத் தவிர்க்க விண்ணப்பம் அளித்து, கைரேகைப் பதிவு இன்றி நியாயவிலைக்கடைகளில் பொருட்களை பெற்றுச் செல்ல ஏற்கனவே வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 

மேலும், கண் கருவிழி மூலம் பதிவுகள் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர், சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற இந்த அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட தமிழக அரசு ஒரு போதும் அனுமதிக்காது. காவிரி நீரைப் பெறுவது என்பது தமிழக அரசின் உயிர்மூச்சாக உள்ளது. உரிமைகளை விட்டுக்கொடுத்து அணை கட்ட அனுமதிக்க முடியாது. தாடிக்கொம்பு, அகரம் உள்ளிட்ட பேரூராட்சிகள் மற்றும் திண்டுக்கல் நகரின் ஒருபகுதி ஆகியவற்றிற்கு குடிநீர் வழங்குவதற்காக ரூ.120 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அதேபோல், வேடசந்துார் பகுதிக்கு ரூ.250 கோடி மதிப்பீட்டிலும், ரெட்டியார்சத்திரம் பகுதிக்கு ரூ.218 கோடி மதிப்பீட்டிலும் தனித்தனி திட்டங்கள் உருவாக்கப்பட்டு, காவிரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

 

TamilNadu Govt will never allow to build Meghadatu Dam say i Periyasamy

 

அதுபோல் தாடிக்கொம்பு பேரூராட்சி பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற சாலைக் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.1.14 கோடி மதிப்பீட்டில் 2.473 கி.மீட்டர் துாரம் 15வது வார்டு காமாட்சிபுரம் பகுதியில் தார்ச்சாலை மற்றும் 11வது வார்டு குறிஞ்சி நகர் மற்றும் மாரியப்பன் நகர் பகுதியில் தார்ச்சாலை, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 5வது வார்டு தாடிக்கொம்பு கிழக்கு தெரு. ஜக்கம்மாள் கோவில் எதிரில் ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் நாடக மேடை, தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.2.18 கோடி மதிப்பீட்டில் 3.740 கி.மீட்டர் துாரம் 3வது வார்டு திருகம்பட்டி முதல் மாரம்பாடி வரை தார்ச்சாலை மற்றும் 6வது வார்டு மறவபட்டி பகுதியில் தார்ச்சாலை, 15வது நிதி ஆணைய மானியம் (Untied Grant) முதல் தவணை திட்டத்தின் கீழ், 8வது வார்டு காப்பிளியபட்டி காலனி பகுதியில் ரூ.16.52 இலட்சம் மதிப்பீட்டில் 0.270 கி.மீட்டர் துாரம் பேவர்பிளாக் சாலை அமைத்தல் என மொத்தம் ரூ.3.57 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.

 

அதேபோல், அகரம் பேரூராட்சிப் பகுதியில், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 8வது வார்டில் ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் கிரியம்பட்டி மெயின் தெரு மற்றும் சத்திரப்பட்டி மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி முதல் இடையகோட்டை ரோடு வரை தடுப்புச்சுவர், சிறுபாலம் மற்றும் வடிகாலுடன் கூடிய தார்ச் சாலை, 1-வது வார்டில் நகர்ப்புற சாலைகள் கட்டமைப்புத் திட்டத்தில் (TURIP) ரூ.1 கோடி மதிப்பீட்டில் சுக்காம்பட்டி வடக்கு பள்ளி முதல் அருகம்பட்டி வரை மற்றும் 5வது வார்டு கொண்டசமுத்திரப்பட்டி முதல் இடையகோட்டை ரோடு வரை வடிகால் மற்றும் சிறுபாலத்துடன் கூடிய தார்ச்சாலை மேம்படுத்துதல், 11வது வார்டு கருங்கல்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நாடக மேடை, 12வது வார்டு மேல்கரைப்புதுாரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் நிதி ரூ.8 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக நாடக மேடை, 14வது வார்டு பெரியமல்லணம்பட்டியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத்திட்டம் நிதி ரூ.13.37 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக அங்கன்வாடி மையக் கட்டடம் கட்டுதல் என மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டப் பணிகள் அடிக்கல் நாட்டித் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்