தமிழகத்தில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இன்று மேலும் 54 பேருக்கு கரோனா பாதிப்பு இன்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தமிழகத்தில் 1,683 ஆக அதிகரித்துள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. முன்னெச்சரிக்கையாக நாடு முழுவதும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்றம் கண்டுள்ளது. இதனால் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு ஏப்ரல், மே மாதங்களில் தமிழக ரேஷன் கடைகளில் கிடைக்கும் அத்தியாவசிய பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இதற்கிடையில் ரேசன் கார்டு இல்லாதவர்களுக்கும் மளிகை பொருட்களை வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ரேசன் கார்டு இல்லையென்றாலும் ரூ.500 மதிப்பிலான 19 வகையான மளிகைப்பொருட்கள் வழங்கப்படும் என்று தமிழக அரசு பதில் அளித்ததையடுத்து, இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 24, 25 க்கு பதிலாக மே 2, 3 ஆம் தேதிகளில் டோக்கன் வழங்கப்படும் என்றும், மே 4 தேதி முதல் அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் அத்தியாவசிய பொருட்களை மக்கள் பெற்றுக்கொள்ளலாம். ஆனால் ரேஷன் கடைக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.