தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதி விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1- ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என தமிழக மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழக அரசின் கோரிக்கையினை ஏற்று, இந்திய அரசின் மீன்வளத்துறை, கால்நடைப்பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை தனது 25-05-2020 நாளிட்ட ஆணையில் தற்போது அமல்படுத்தப்படும் ஊரடங்கு காலத்தினைக் கருத்தில் கொண்டு, இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் ஏப்ரல் 15- ஆம் தேதி முதல் மே 31- ஆம் தேதி வரையிலான 47 நாட்களுக்கும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 15- ஆம் தேதி முதல் ஜூலை 31- ஆம் தேதி வரையிலான 47 நாட்களுக்கும் தனியுரிமை பொருளாதார மண்டலத்தில் (EEZ) மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்படும் என்ற திருத்திய ஆணையை வெளியிட்டுள்ளது.
கரோனா நோய்க்கட்டுப்பாடு காரணமாகத் தொழில் நிறுத்தம் செய்துள்ள தமிழ்நாட்டின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் ஜூன் 1- ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். மேற்கு கடற்கரை பகுதியில் விசைப்படகுகளுக்கு 61 நாளில் இருந்து 47 நாட்களாக மீன்பிடித் தடைக்காலம் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அப்பகுதி மீனவர்கள் ஆகஸ்ட் 1- ஆம் தேதி முதல் மீன்பிடிக்கச் செல்லலாம். இதன் மூலம் தமிழ்நாட்டின் விசைப்படகு உரிமையாளர்களும் மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்களும், மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான மீன்பிடித் தொழிலாளர்களும், மீன்பிடித் தொழிலைச் சார்ந்துள்ளவர்களும் பயன்பெறுவார்கள்." இவ்வாறு அமைச்சரின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.