தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி) நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தமிழ்நாடு அரசு துறைகளில் பணியிடங்கள் நிரப்பப்படும். இந்த தேர்வாணையத்திற்கு தற்போது நான்கு புதிய உறுப்பினர்களைத் தமிழ்நாடு அரசு நியமித்துள்ளது. புதிய உறுப்பினர்கள் பதவியேற்கும் நாளில் இருந்து 6 ஆண்டுகள் அல்லது உறுப்பினராக நியமிக்கப்பட்டவர் 62 வயதை எட்டும்வரை உறுப்பினர் பதவியில் நீடிப்பர்.
முனியநாதன் ஐ.ஏ.எஸ்: சென்னையைச் சேர்ந்த முனியநாதன் 2009ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் முடித்தவர். முதுகலை பொருளாதாரம் உள்ளிட்ட நிதி சார்ந்த படிப்புகளைப் பயின்ற முனியநாதன், நாகை மாவட்ட ஆட்சியராக இருந்துள்ளார். தற்போது தொழிலாளர் நல ஆணையராக இருக்கிறார்.
ஜோதி சிவஞானம்: சென்னை பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியராக இருக்கிறார். பொருளாதாரப் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற இவர், சென்னை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராகவும் உள்ளார். அதேபோல் அம்பேத்கர் பொருளாதார மையத்தின் இயக்குநராகவும், சென்னை பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.
முனைவர் அருள்மதி: சென்னை எத்திராஜ் கல்லூரியின் உயிர் வேதியியல் பேராசிரியர். அத்துறையில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார்.
ராஜ்மரியம் சூசை: சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள டான் பாஸ்கோ பள்ளியில் பணியாற்றிவருகிறார். இவர் ஒரு பாதிரியார் ஆவார். ஒரு பாதிரியார் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமிக்கப்பட்டிருப்பது வரலாற்றில் இதுவே முதல்முறை ஆகும்.