தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், மாநிலம் முழுவதும் நாளை (20/04/2021) முதல் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 04.00 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதேபோல் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் பயணம் செய்ய முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இருப்பினும் நாளை முதல் அரசு விரைவுப் பேருந்துகள் பகலில் அதிகளவில் இயக்கப்படும் எனப் போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
மதுரையில் இருந்து சென்னை, கோவை உட்பட தொலைதூரம் செல்லும் பேருந்து சேவையில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பகல் 12.00 மணி வரை மட்டுமே மதுரையில் இருந்து பேருந்து சேவை இயக்கப்படும். இரவு 08.00 மணிக்குள் வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்படும். பெங்களூருக்குச் செல்லும் பேருந்துகளும் பகல் 12.00 மணி வரை மட்டுமே இயக்கப்படும். மதுரையில் இருந்து சென்னைக்கு நண்பகல் 12.00 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். மதுரையில் இருந்து நாகர்கோவில் இடையே மாலை 05.00 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். மதுரையில் இருந்து நெல்லைக்கு மாலை 06.00 மணி வரையும், மதுரையில் இருந்து திருச்சிக்கு இரவு 08.00 மணி வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும். மதுரையில் இருந்து திண்டுக்கல்லுக்கு இடையே இரவு 08.00 மணி வரையும், மதுரையில் இருந்து தஞ்சாவூருக்கு இரவு 06.00 மணி வரையும் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.