Skip to main content

"மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ்தான்" - கே.எஸ்.அழகிரி!

Published on 06/05/2021 | Edited on 06/05/2021

 

tamilnadu congress committee chief ks alagiri statement

 

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (06/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வந்த மக்கள் விரோத பாஜக, அதிமுக ஆட்சிகளுக்குப் பாடம் புகட்டுகிற வகையில், கடந்த மக்களவை தேர்தலில் 39 இடங்களில் 38இல் திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 60 லட்சம் வாக்குகள் அதிகமாக அளித்து தமிழக மக்கள் அமோக ஆதரவை அளித்து வெற்றிபெறச் செய்தனர்.

 

அதையொட்டி சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு 159 இடங்களில் வெற்றிபெறச் செய்து, தமிழகத்தில் நடைபெற்று வந்த பாஜக ஆதரவுபெற்ற அராஜக ஊழல் ஆட்சி அகற்றப்பட்டு, திமுக தலைமையில் நல்லாட்சி அமைந்துள்ளது. அனைத்து நிலைகளிலும் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துவந்த தமிழக மக்களுக்கு விடியல் ஏற்படுகிற வகையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்று நல்லாட்சியை அளிக்க இருக்கிறார். இத்தகைய முடிவை அளித்த தமிழக மக்களை இந்திய நாடே பாராட்டி வருகிறது.

 

இந்நிலையில், திமுக, அதிமுகவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது பெரிய கட்சி யார் என்று ஊடகங்களின் மூலமாகப் பட்டிமன்றம் நடத்தப்பட்டு வருகிறது. உண்மையான கள நிலவரத்தை மூடிமறைத்து தவறான தகவல்களின் அடிப்படையில் நாம் தமிழர் கட்சிதான் மூன்றாவது பெரிய கட்சி என்று ஒரு சில ஊடகங்களில் தவறாகச் சித்தரிக்கப்பட்டு வருகிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் முடிவுகளின்படி 234 தொகுதிகளில் 25 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்குகள் ஏறத்தாழ 20 லட்சம் ஆகும். இதன்படி ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி பெற்ற சராசரி வாக்குகள் 80 ஆயிரம். அதேபோல, நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளில் போட்டியிட்டு அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்து 30 லட்சம் வாக்குகளைப் பெற்றிருக்கிறது. இதன்படி, நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் பெற்ற சராசரி வாக்குகள் 13 ஆயிரம் மட்டுமே. எனவே, 25 இடங்களில் போட்டியிட்டு,18 இடங்களில் 72 சதவிகித வெற்றிபெற்று, ஒரு தொகுதியில் 80 ஆயிரம் வாக்குகள் பெற்ற காங்கிரஸ் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா? ஆனால், ஒரு தொகுதியில் சராசரியாக 13 ஆயிரம் வாக்குகள் மட்டுமே வாங்கிய நாம் தமிழர் கட்சி மூன்றாவது பெரிய கட்சியா? எது பெரிய கட்சி? 

 

இதனடிப்படையில் தமிழக அரசியலில் தொகுதிகளில் பெற்ற வெற்றியின் அடிப்படையிலும், ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிகளிலும் சராசரியாக வாங்கிய வாக்குகளின் அடிப்படையிலும் மூன்றாவது பெரிய கட்சி காங்கிரஸ் கட்சிதான் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒரு கட்சியின் பலத்தைக் கணக்கிடும்போது, 234 இடங்களில் பெற்ற வாக்குகளை வைத்துக்கொண்டு 25 இடங்களில் மட்டுமே போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி பலத்தைக் கணக்கிடுவது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல.

 

மூன்றாவது அணி என்று போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி எந்த தேர்தலிலும் இதுவரை ஒரு சட்டமன்றத் தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. ஓர் அரசியல் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தோற்பதற்காகவே போட்டியிடுகிறது என்று சொன்னால், அது நாம் தமிழர் கட்சியாகத்தான் இருக்க முடியும். தேர்தலில் வெற்றிபெறுகிற நோக்கம் இல்லாமல், நாம் தமிழர் கட்சி தொடர்ந்து போட்டியிடுவதற்காகவே தவறான தேசவிரோத கொள்கையின் அடிப்படையில் இளைஞர்களை ஈர்ப்பதற்கு சீமான் மேற்கொள்கிற அனைத்து முயற்சிகளும் விழலுக்கு இறைத்த நீராகவே அமையும். தேர்தலில் சீமான் போட்டியிடுவதும், தோல்வியைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதற்கும் பின்னாலே இருக்கிற மர்ம ரகசியத்தை இளைஞர்கள் விரைவில் புரிந்துகொண்டு தெளிவுபெறுவார்கள்.

 

எனவே, நாம் தமிழர் கட்சியாக இருந்தாலும், மக்கள் நீதி மய்யமாக இருந்தாலும் ஒரு சட்டமன்றத் தொகுதியிலும் கூட வெற்றிபெற முடியவில்லை என்றால், தாங்கள் செல்கிற அரசியல் பாதை குறித்து மறுசிந்தனை செய்ய வேண்டுமே தவிர, புதிய வியாக்கியானங்களை வழங்கி தங்களை மூன்றாவது பெரிய கட்சி என்று அழைப்பதை இத்துடன் நிறுத்திக்கொள்ள வேண்டும். தமிழகத்தைப் பொறுத்தவரை இன்றைக்கும் ஜீவனுள்ள இயக்கமாகக் காங்கிரஸ் கட்சி விளங்குகிறது என்பதை எவராலும் மறுக்க முடியாது." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்