தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:
’’நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்காக கூட்டுவோம் என்று வாக்குறுதி கொடுத்தவர்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கிற வகையில் நடவடிக்கைகளை மத்திய பா.ஜ.க. அரசு எடுத்து வருகிறது. விவசாயிகளின் விளை பொருளுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் குழு பரிந்துரையின்படி உரிய விலை கிடைக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், கடந்த 6 ஆண்டுகளாக விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் படு பாதாளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் கடன் பெறுவதற்கு கடுமையான விதிகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் விவசாயிகளுக்கு அரசு மானியத்துடன் வழங்கப்படும் நகைக் கடனுக்கான வட்டிச் சலுகை ரத்து செய்யப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பால் விவசாயிகள் கடுமையாக அதிருப்தி அடைந்துள்ளனர். விவசாயிகளில் பெரும்பாலானோர் தங்களது சாகுபடி செலவுக்கு பயிர்க்கடன் பெறுவது வழக்கம். ஆனால் இது போதுமானதாக இருப்பதில்லை. இந்தச் சூழலில் உடனடியாக நிதி திரட்டுவதற்காக தங்களது நகைகளை அடமானம் வைத்து கடன் பெறுவது எங்கும் இருக்கிற நடைமுறையாகும்.
தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டியில் நகைக் கடன் ரூபாய் 1 லட்சம் முதல் 3 லட்சம் வரை வழங்கப்பட்டு வந்தது. உரிய காலமான 10 மாதத்திற்குள் கடன் தொகையை திருப்பி செலுத்தினால், 4 சதவீத வட்டி மட்டுமே செலுத்தினால் போதுமானது. எஞ்சிய 3 சதவீத வட்டியை மத்திய அரசு மானியமாக செலுத்துவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் இருந்து நடைமுறையில் இருந்து வருகிறது. இத்தகைய நடைமுறை தமிழ்நாடு அரசின் கூட்டுறவு கடன் சங்கங்களிலும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்த திட்டம் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படும் என்று மத்திய நிதித்துறை அறிவித்துள்ளது. இதனால் விவசாயிகள் நகைக் கடனுக்கு கூடுதல் வட்டி செலுத்த வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது.
மத்திய நிதித்துறை இத்தோடு நில்லாமல், இனி நகைக் கடன் திட்டமானது கிசான் கடன் அட்டை மூலம் மட்டுமே செயல்படுத்தப்படும், இது ஆதார் எண்ணோடு இணைக்கப்படும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டிருக்கிறது. இதைத் தவிர, பணமதிப்பு இழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு ஆகியவற்றால் கடும் சுமையை விவசாயிகள் அனுபவித்து வருகிறார்கள். ஏற்கனவே உரிய விலை கிடைக்காததாலும், கடன் சுமையினாலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகிற விவசாயிகளுக்கு மத்திய பா.ஜ.க. அரசின் நிதித்துறை செயலாளரின் அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது. இதை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அப்படி திரும்பப் பெறப்படவில்லையெனில் இப்பிரச்சினை குறித்து தமிழகத்திலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் உறுப்பினர்கள் மத்திய நிதியமைச்சரை சந்தித்து விரைவில் முறையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். ’’