சிதம்பரத்தை சேர்ந்த 26 வயதுடைய லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து சிதம்பரம் அரசு மருத்துவமனை சென்ற அவரை உயர் ரக பரிசோதனைக் கருவிகள் இல்லாததால் மேல் பரிசோதனைக்காக அண்ணாமலை ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
அங்கே இரு வாரங்கள் அனுமதிக்கப்பட்டு மேற்கொண்ட பரிசோதனைகளில் லதாவுக்கு கர்ப்பப்பைக்கு அருகில் உள்ள வலது சினைப்பையில் பெரிய நீர்க்கட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. எனினும் அறுவை சிகிச்சைக்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மயக்குனர்கள் ஒப்புதல் தர மறுத்ததால், அவரை கடலூரில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பியுள்ளனர்.
பின்னர் அங்கும் அனுமதி மறுக்கப்பட்டதால் வேறு வழியின்றி லதா புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஜிப்மர் மருத்துவர்களும், தமிழகத்தில் மாவட்டத்திற்கு ஒரு அரசு மருத்துவமனை உள்ளதால் அங்கே சென்று சிகிச்சை பெற்றுக் கொள்ளவும் எனக்கூறி அனுமதி மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில் செய்வதறியா திகைத்த லதா மீண்டும் சிதம்பரம் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு தனக்கு தரப்பட்ட அனைத்து மருத்துவ அறிக்கைகளையும் எடுத்துக்கொண்டு கடந்த 25ஆம் தேதி வந்துள்ளார். அப்போது மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவர் லதாவை உடனே அனுமதித்தார். பின்னர் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
மேலும் பணி மருத்துவர் செய்த பரிசோதனைகளில் 36 வாரங்கள் கடந்த சிசு இருக்கும் அளவில் வயிற்றில் உள்ள கட்டி இருப்பது கண்டறியப்பட்டது. கட்டியின் நீள அகலம் 30 செ.மீ x 30 செ.மீட்டரும், அதனுள் 8 லிட்டர் சினைப்பை சுரபி நீர் இருப்பதும் மீயொலி நோட்டம் மூலம் தெரிந்தது.
அப்போது அப்பெண் வலியில் துடித்ததாலும், சினைப்பை கட்டி உடையும் நிலையில் இருந்ததாலும், மயக்குனரிடமும் விடுப்பிலிருக்கும் தன் சக மருத்துவர்களிடமும் கலந்தாலோசித்து, அன்று இரவே 9 மணிக்கு அறுவை சிகிச்சை (Laprotomy) செய்ய முடிவு செய்யப்பட்டது.
புற்றுநோய் கட்டியா அல்லது சினைப்பை நீர்க்கட்டியா என்று கண்டறிய செய்யப்படும் CA125 எனும் ரத்தப்பரிசோதனையில் 15 யூனிட் இருந்தது (35க்கு மேல் என்றால் புற்றுநோய் கட்டி என்று அர்த்தம்), சர்வதேச சினைப்பை கட்டி வழிமுறை அமைப்பு பரிந்துரை செய்த விதிகளின்படி இந்த கட்டி புற்று நோய் தன்மை அற்றது (B1B3) என்பதும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த பரிசோதனைகளால் அப்பெண்ணுக்கு உள்ளது வலது சினைப்பை கட்டி என்று உறுதி செய்யப்பட்டு, அவருக்கு கட்டி அகற்றும் அறுவை சிகிச்சை செய்யலாம் என்றும் மருத்துவர் குழு தீர்மானித்து அறுவை சிகிச்சையை துவங்கினர்.
கட்டி பெரிதாக இருந்ததால், கட்டியில் துளையிட்டு அந்த நீர் சிறிய பம்ப் மூலம் வெளியேற்றப்பட்டு கட்டி அகற்றப்பட்டது பல மாதங்களாக அவதியுற்றுவந்த லதா பூரண குணமடைந்துள்ளார்.
மிக சிறப்பாக அறுவை சிகிச்சையை செய்த குழு - மரு.நீதிமாணிக்கம் (மயக்குனர்), மரு.நந்தினி, மூத்த மகப்பேறு மற்றும் பெண் பிணியியல் மருத்துவர், டாக்டர் ராகுல் ஆனந்த், அன்றைய பணி மகப்பேறு மருத்துவர், அறுவை அரங்க செவிலியர் மகாலக்ஷ்மி, அறுவை அரங்க உதவியாளர்கள் சௌந்தர்ராஜன் மற்றும் ஷாநவாஸ். அறுவை சிகிச்சை செய்த மருத்துவ குழுவிற்கு இப்படிப்பட்ட மேம்பட்ட அறுவை சிகிச்சை தன் வயிற்றில் இருந்த பெரும் சுமை குறைந்தது என்றும், தான் பூரண நலமோடு இருப்பதாகவும், நிறைவுடன் தன் நன்றிகளைத் தெரிவித்துள்ளார் லதா. மருத்துவகுழுவினரின் சேவைகளை அனைவரும் பாராட்டி வருகிறார்கள்.