நாடு முழுவதும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம், ஓமக்குளம் பகுதியில் பெட்ரோல் பங்க் வைத்துள்ள சண்முகசுந்தரம் பங்கிற்கு பெட்ரோல் நிரப்ப வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் கரோனா வைரஸில் இருந்து காத்துக்கொள்ள இலவசமாக முகக் கவசம் வழங்கி வருகிறார்.

மேலும் வைரஸிலிருந்து காப்பது குறித்த துண்டுப் பிரசுரத்தை அனைவருக்கும் வழங்கி பெட்ரோல் பங்க் அருகில் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் வைத்து கிருமி நாசினி மூலம் கை கழுவுதல் குறித்து அனைவருக்கும் விளக்கப்பட்டது.
முகக் கவசத்தை பெற்றவர்கள் தற்போது பல கடைகளில் காசு கொடுத்தாலும் இந்த முகக்கவசம் வாங்க முடியவில்லை. தற்போது இங்கு கொடுத்தது பெரும் உதவி செய்தது போல் இருக்கு என்று நன்றி தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சிதம்பரம் நகராட்சி ஆணையர் சுரேந்தர்ஷா, பெட்ரோல் பங்க் உரிமையாளர் சண்முகசுந்தரம், பெட்ரோல் பங்க் ஊழியர்கள், நகராட்சி ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பெட்ரோல் பங்க் உரிமையாளர் சண்முகசுந்தரம் ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகள் தினத்தன்று காலை முதல் மாலை வரை பெட்ரோல் பங்கிற்கு வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக ஒரு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருகிறார். அதேபோல் மகளிர் தினத்தன்று பெட்ரோல் பங்கிற்கு வரும் மகளிர்கள் அனைவருக்கும் இரண்டு கைகள் நிறைய வளையல் அணிவிக்க ஏற்பாடு செய்து வருகிறார். மேலும் இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை செய்து வருவது அப்பகுதியில் உள்ள மக்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகிறார்கள்.