தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 14 நாட்கள் அரசு முறை பயணமாக வெளிநாடு சென்றுள்ளார். முதற்கட்டமாக லண்டன் சென்ற முதல்வர், லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு, தற்போது அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு நியூயார்க் நகரில் உள்ள கால்நடைப்பண்ணையை நேற்று பார்வையிட்டார். அதன் தொடர்ச்சியாக பல்வேறு தொழில் அதிபர்களை சந்தித்து தமிழகத்தில் தொழில் தொடங்க வருமாறு அழைப்பு விடுத்து வருகிறார். அதனை தொடர்ந்து நியூயார்க்கில் முதல்வர் தலைமையில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் தொழில் தொடங்க Jean Martin, Zillion Technologies, Aquil systems ஆகிய 16 நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர்.
அமெரிக்க பயணத்தில் தமிழக முதல்வர் ரூபாய் 2,780 கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகளை ஈர்த்தார். Haldia Petrochemicals நிறுவனத்துடன் ரூபாய் 50,000 கோடி மதிப்பிலான கொள்கையளவிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதன் மூலம் தமிழகத்தில் 20,000 இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது பேசிய முதல்வர், அமெரிக்க நிறுவனங்கள் அதிகளவில் தொழில் முதலீடு செய்ய தமிழகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தார். முதல்வரின் அமெரிக்க பயணத்தில் தமிழக அமைச்சர்கள் ராஜேந்திர பாலாஜி, ஆர்.பி.உதயகுமார், எம்.சி.சம்பத், தலைமை செயலர், அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.