Skip to main content

திருச்சியில் ஆய்வு மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 12/06/2021 | Edited on 12/06/2021

 

tamilnadu chief minister mkstalin visit for trichy

 

நீர்வள ஆதாரத்துறை, திருச்சி ஆற்றுப்பாதுகாப்பு கோட்டத்தின் கட்டுப்பாட்டின்கீழ் பாசன ஆதாரங்களில் திருச்சி மாவட்டத்திலுள்ள 20 பணிகளுக்கு ரூபாய் 177.30 இலட்சம் மதிப்பீட்டில் 66.11 கிமீ தூரம்வரை தூர்வார வழிவகை செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், கொடியாலம் மற்றும் புலிவலம் கிராமம், புலிவலம் மணற்போக்கியிலிருந்து செல்லும் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டும் என விவசாயிகள் முக்கிய கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

எனவே மேற்படி கோரிக்கையான வடிகால் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பெட்டவாய்த்தலை கிராமம், காவிரி ஆற்றிலிருந்து பிரியும் உய்யக்கொண்டான் வாய்க்காலில் இடதுகரை மைல் 9.5 மீட்டர் மணற்போக்கில் அமைந்துள்ளது. இம்மணற்போக்கி மூலம் செல்லும் வடிகால் வாய்க்காலானது, புலிவலம் கிராமத்தில் ஆரம்பமாகி கொடிங்கால் வடிகாலில் கலந்து காவிரி ஆற்றில் கலக்கிறது.

 

மழை மற்றும் வெள்ளக்காலங்களில் வரும் கூடுதல் நீரினால் நீரோட்டம் தடையேற்பட்டு அப்பகுதி பாசன நிலங்கள் மற்றும் கிராமப் பகுதிகள் மிகவும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய நிலை இருந்தது. எனவே விவசாயிகளின் கோரிக்கையின்படி, மேற்படி புலிவலம் மணற்போக்கி வடிகால் வாய்க்கால் 100 மீ முதல் 1,200 மீ வரை தூர்வாரும் பணிக்கு ரூபாய் 29.70 இலட்சம் மூன்று பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறப்பட்டது. இந்நிதியின்கீழ் தற்போது தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இப்பணியின் மூலம் கொடியாலம் மற்றும் புலிவலம் கிராம விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவார்கள்.

 

திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட முதல்வர் மு.க. ஸ்டாலின் கல்லணை மற்றும் தூர்வாரும் பணிகளை ஆய்வுசெய்தார். இந்த நிகழ்வில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு, பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, அமைச்சர்கள் துரைமுருகன் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சட்டமன்ற உறுப்பினர்கள் சௌந்தரபாண்டியன், காடுவெட்டி தியாகராஜன், ஸ்டாலின்குமார், பழனியாண்டி, இனிகோ இருதயராஜ், கதிரவன், அப்துல் சமத் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், நீர்வளத்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

சார்ந்த செய்திகள்