காவிரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் கல்லணையில் தண்ணீர் திறக்கப்பட்டு நீர் வரத் தொடங்கியுள்ளது. ஆனாலும் பல இடங்களில் பாலம், மராமத்துப் பணிகள் தொடங்கி நடப்பதால் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான் தண்ணீர் வரத்து வாய்க்காலை காணவில்லை என்றும், கண்டுபிடித்து கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கறம்பக்குடி வட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.
தண்ணீர் வருவதற்குள் கண்டுபிடித்து தரவில்லை என்றால் பொதுப்பணித்துறை அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகையிடுவதுடன் ஆட்சியர் அலுவலகத்தில் வாய்க்கால் கிடைக்கும் வரை காத்திருக்கவும் முடிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஊரணிபுரம் அருகே உள்ள தளிகைவிடுதி பகுதி வழியாக கல்லணை கால்வாயில் செல்லும் காவிரி நீர் கால்வாயில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் காட்டாத்தியில் உள்ள பெரிய ஏரியில் தண்ணீரை தேக்கி வைத்து, அதில் இருந்து சுமார் 300 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் சுமார் 1.5 கிலோ மீட்டர் நீளமுள்ள கிளை வாய்க்காலில் சுமார் 100 மீட்டர் தூரத்துக்கு அப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து பொக்லைன் இயந்திரம் மூலம் இடித்து தரைமட்டமாக்கி தங்களின் விளைநிலத்துடன் இணைத்துக் கொண்டனர். இதனால் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த ஆண்டு தண்ணீர் வந்தாலும் காட்டாத்தில் காவிரி பாசன விவசாயிகளின் சாகுபடியும் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கல்லணையில் இருந்து காவிரி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் வாய்க்காலை இடித்து தரைமட்டமாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து காணாமல் போன வாய்க்காலை சீரமைத்துத் தர வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை கொடுத்தள்ளனர்.
இதுகுறித்து காட்டத்தில் பகுதி விவசாயிகள் கூறும் போது.. ஒவ்வொரு வருசமும் தண்ணீர் வரும், பாதியில் நிற்கும். இந்த வருசம் தண்ணீர் வந்து விவசாயம் செய்யலாம் என்று விவசாயிகள் தயாராகி வருகின்றனர். ஆனால் வாய்க்காலை காணவில்லை. அதனால் தண்ணீர் வருவதற்குள் விரைந்து செயல்பட்டு வாய்க்காலை சீரமைத்துத் தர வேண்டும். இல்லாவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகம் மற்றும் கறம்பக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவதுடன் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காணாமல் போன வாய்க்காலை கண்டுபிடித்து தரும் வரை காத்திருக்கவும் முடிவு செய்துள்ளோம் என்றனர்.