ஆன்லைன் மோசடியில் அதிக பணத்தை பறி கொடுப்பதில் தமிழகம்தான் முதலிடம் வகிப்பதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவர அறிக்கை பட்டியலில் 2016-17 ஆம் ஆண்டு முதல் 2018-19 ஆம் ஆண்டு வரை அதிகபட்சமாக தமிழகத்தில் 56 கோடி ரூபாய் ஆன்லைன் மூலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 46 கோடி ரூபாய் இழப்புடன் மகாராஷ்டிரா இரண்டாவது இடத்தையும், 37 கோடி ரூபாய் பறிகொடுத்து ஹரியானா மூன்றாவது இடத்திலும் இருக்கிறது. தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 644 ஆன்லைன் மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும் குறிப்பாக தொழில்நுட்ப அறியாத 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களிடமே அதிக மோசடிகள் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக காவல்துறை மற்றும் குற்றவியல் பிரிவு போலீசார் ஆன்லைன் மோசடி குறித்து அதிக விழிப்புடன் இருப்பதால் அதிக அளவு புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொலைபேசியில் தொடர்பு கொண்டு யாரேனும் வங்கி விவரங்களை கேட்டால் தெரிவிக்கக்கூடாது. வங்கிகள் ஒருபோதும் தொலைபேசி வழியே கணக்கு விவரங்களை கேட்பதில்லை. ஏடிஎம் கார்டின் ரகசிய எண்ணை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. ஏடிஎம்களில் பணம் எடுக்க செல்லும் போது தங்களை யாரேனும் கவனிக்கிறார்களா என்பதை உற்று நோக்க வேண்டும். ஏடிஎம் இயந்திரத்தில் அட்டையை செலுத்தும் முன்பு அதில் ஏதோ ஒரு ரகசிய கருவிகள் பொருத்தப்பட்டு உள்ளதா என்று கவனிக்க வேண்டும். நெட்பேங்கிங் மற்றும் ஏடிஎம் அட்டை ரகசிய எண்ணை அவ்வப்போது மாற்றியமைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
அண்மையில் சென்னையில் பௌலின் என்ற ஆசிரியர் ஒருவர் மொபைலில் உள்ள தனியார் பண பரிவர்த்தனை செயலியில் பணம் அனுப்பியது குறிப்பிட்ட நபருக்கு சென்றடையாததால் அந்த நிறுவனத்தின் சேவை எண் என நினைத்து தவறான எண்ணுக்கு கால் செய்து அதன் மூலம் ஆன்லைன் மோசடி நபர்களால் பணம் திருப்பட்ட சம்பவமும், சென்னை வடபழனியில் கல்லூரி மாணவி ஒருவர் ஆன்லைனில் ஆர்டர் செய்த பிரியாணி தொகையான 74 ரூபாயை மீட்பதற்காக போலி சேவை எண்னை தொடர்பு கொண்டு 40 ஆயிரம் ரூபாயை இழந்ததும் குறிப்பிடத்தக்கது.