நம்பிக்கையூட்டும் எதிர்காலத்திற்கு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் முறையில் மாற்றம் வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் மாநிலத்தலைவர் பி.கே இளமாறன் கோரிக்கை வைத்துள்ளார். அந்த கோரிக்கை அறிக்கையில்,
10 மற்றும் 12 ஆம் வகுப்புப் பாடத்திட்டங்கள் மாற்றியமைத்தது இந்திய அளவில் தரமான கல்விக்கு உத்தரவாதம் அளித்துள்ளோம் என்றால் அது மிகையாகாது. ஆனால் கேள்விமுறை பழைய முறையில் ஒரு மதிப்பெண், இரண்டு, மூன்று, ஐந்து மதிப்பெண்கள் அடிப்படையில் தயாரிப்பது அதேபோன்றே ஐந்தாண்டுகள் வரை நீட்டிப்பது போன்றவைகள் தவிர்க்கப்படவேண்டும். டி.ஆர்.பி, டி.என்.பி.எஸ்.சி உள்ளிட்டப் போட்டித்தேர்வுகள் போன்று வினாக்கள் அமைத்திடவேண்டும். அப்போதுதான் மாணவர்கள் படிக்கின்றபோதே போட்டித்தேர்வுகளுக்கு தங்களை தயார்படுத்திக் கொள்ளமுடியும். மாணவர்கள் எளிதாகவும் ஆர்வத்துடனும் படிக்கமுடியும்.
தேர்வு எப்போது முடியும் என்று எதிர்பார்ப்பதைவிட எப்போது தொடங்கும் என்ற ஆவலைத் தூண்டிட வேண்டும். தற்போது புதிய பாடத்திட்டத்தின் மூலம் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதிவிட்டார்கள். தற்போது கரோனா வைரஸ் பரவலுள்ள இந்நிலையில், தேர்வு எப்போது என்பது நிலைத்தத்தன்மை இல்லாதது போன்ற குழப்பங்களில், தேர்வை சந்திக்க தயாராவது அதற்காக உளவியல் ரீதியாக மனதை தயார்படுத்துவது அவ்வளவு சுலபமல்ல. அதே நேரத்தில் மன உளைச்சல் ஏற்படாமல் இருப்பதிலும் கவனமாக இருக்கவேண்டும். 10 ஆம் வகுப்பு வினாத்தாள் மாற்றியமைக்கப்படும்போது, அது புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். எடுத்துகாட்டாக 100 மதிப்பெண்கள் கொண்ட வினாத்தாள் தயாரிக்கும்போது, 60 மதிப்பெண்களுக்கு, ஒரு மதிப்பெண் (சரியானவிடை தேர்வு) வினாக்களும், OMR தாள் மூலமாக வைக்கப்படவேண்டும்.
30 மதிப்பெண்களுக்கு 5 மதிப்பெண் வினாக்களை எழுத்து முறையில் வைக்க வேண்டும். மீதமுள்ள 10 மதிப்பெண் மாணவனின் மதிப்பீடு குறித்ததாக இருக்கவேண்டும், அதாவது மாணவனின் ஒழுக்கம், ஈடுபாடு, பேரிடர் மேலாண்மை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பொது சுகாதாரம் உள்ளிட்டவை அடிப்படையில் அமைந்திடவேண்டும். இம்முறையில் வினாத்தாள் அமையும்போது மாணவர்களின் ஒழுக்கம், சமூகம் சார்ந்த பார்வைகள் மேம்படும். படிப்பதில் ஆர்வத்தைத் தூண்டும். மேலும் வினாத்தாள் திருத்துவதும் ஆன்லைன் மூலம் திருத்துவதால் காலம் விரையம் ஆகாது. குறிப்பாக வெளிப்படைத் தன்மையும், நம்பகத்தன்மையும் கூடும். இது சாதாரண சூழலுக்கு மட்டுமின்றி, அசாதாரண சூழலுக்கும் ஏற்றதாக அமையும். வினாத்தாள் முறை மாற்றம் மூலம் மாணவர்கள் படிப்பினை உறுதிசெய்வதோடு பள்ளிக்கு வரும் எண்ணம் அதிகரிக்கும். இடைநிற்றல் அதிகரிக்காது. கல்வியும் நம்பிக்கை ஊட்டுவதாக அமையும் எனக் கூறியுள்ளார்.