வேலூர் மாவட்டம், குடியாத்தம் நகரில் கவுண்டன்யா நதியோரம் அமைந்துள்ளது பிரபலமான கெங்கையம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா நடைபெறும். லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விழாவை நடத்திட இந்து சமய அறநிலையத்துறையும், இந்த கோவில் பணிகளை முன்னின்று நடத்தும் கிராம விழாக்குழுவும் தீவிரமாக உள்ளது.
குடியாத்தம் நகராட்சியில் கடந்த வாரம் நகரமன்ற தலைவர் சௌந்தர்ராஜன் தலைமையில் மன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் திருவிழாவுக்கு நகராட்சிக்கு சார்பில் செய்யப்படும் பணிகளுக்கான செலவினத்தை இந்து சமய அறநிலையத்துறையிடம் இருந்து பெறவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. சிறப்பு தீர்மானமாக திருவிழாவின்போது 200 கடைகளுக்கு மேல் தற்காலிக கடைகள் அமைக்கப்படும். இந்த கடைகள் ஒதுக்குவதில் முறைகேடுகள் நடக்கின்றன. அதனால் கடைகள் ஒதுக்குவதை டெண்டர் விடுவதை ஆன்லைன் வழியாக விண்ணப்பம் வாங்கி, ஆன்லைன் வழியாக டெண்டர் நடத்த வேண்டும், அப்படி செய்தால் அறநிலையத்துறைக்கு அதிகளவு வருமானம் வரும் என நகராட்சி ஒரு தீர்மானம் இயற்றியது. இந்த தீர்மானங்களை கண்டித்து இந்து அமைப்புகள் தொடர்ந்து இரண்டு நாட்களாக போராட்டம் நடத்திவருகின்றன.
கடைகளை ஏலம் விடுவது இந்து சமய அறநிலையத்துறை. கடைகளை ஆன்லைன் வழியாக ஏலம் நடத்துங்கள் எனக்கேட்க வேண்டியது ஏலத்தில் பங்குபெறுபவர்கள். ஆனால் அதற்கு சம்மந்தமே இல்லாத நகராட்சி தரப்பில் தீர்மானம் இயற்றுவது வியப்பாக இருக்கிறது என்கிறார்கள் பலரும்.
கெங்கையம்மன் கோவிலை இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் செய்கிறது. ஆனாலும் கோவில் பணிகளை, விழாக்களை நடத்த தனியே கிராம கமிட்டியுள்ளது. இந்த கமிட்டியின் தலைவராக நீண்ட ஆண்டுகளாக இருந்தவர் இதே கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மறைந்த கோவிந்தராஜ். அவரது மறைவுக்குப் பிறகு அவரது குடும்பம் செய்து வருகிறது. திருவிழா முடிந்ததும் கோவிலுக்காக வசூல் செய்யப்படும் பணம் சரியாக கணக்கு காட்டுவதில்லை என்கிற குற்றச்சாட்டை ஒவ்வொரு ஆண்டும் சிலர் எழுப்புவார்கள், பின்பு அது அடங்கிவிடும். இந்தாண்டு கோவிந்தராஜ்யின் குடும்பத்தைச் சேர்ந்த தேவகிகார்த்திகேயன் திமுக சார்பில் நகராட்சி தேர்தலில் நின்று கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார். எதிர்த்து நின்ற பாமக வேட்பாளர் தோல்வியை சந்தித்துள்ளார்.
அவர்தான் சிலருடன் சேர்ந்து கோவில் கிராம கமிட்டிக்கு எதிராக நகராட்சியில் உள்ள சில திமுக கவுன்சிலர்களை தூண்டி விடுகிறார். அதற்கு காரணம், இந்து சமய அறநிலையத்துறை கடைகளை ஏலம் விட்டாலும், கடை எடுப்பவர்கள் கோவில் விழா கமிட்டிக்கு தனியாக கப்பம் கட்டவேண்டும். அப்படி வரும் நிதியில் பங்கு வேண்டும் என எதிர்பார்த்தே அந்த கவுன்சிலர்கள், மன்ற கூட்டம் வரை இந்த விவகாரத்தை கொண்டு வந்துள்ளார்கள் என்கிறார்கள்.
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கோவில் உள்ளது, உண்டியல் வருமானம் அறநிலையத்துறை எடுத்துக்கொள்கிறது. திருவிழாவுக்கான தொகையை அறநிலையத்துறை மிகக்குறைவாகவே ஒதுக்குகிறது. அந்த பணத்தை வைத்து சரியாக திருவிழா நடத்த முடியாது என்பதாலே ஊர் மக்களிடம் வசூல், வியாபாரிகளிடம் நன்கொடை பெறப்படுகிறது. அதைக்கொண்டே அன்னதானம், வானவேடிக்கை உட்பட பலவற்றை செய்கிறோம் என்கிறார்கள்.
தற்காலிக கடை வசூல் தொகைக்காக முட்டிக்கொள்ளும் இவர்கள் ஒரு விவரத்தைத் திட்டமிட்டு மறைக்கிறார்கள். திருவிழாவின்போது வரும் கடைகள் எல்லாமே கவுண்டன்யா நிதி ஆற்றில்தான் அமைக்கப்படுகிறது. அது நீர்வளத்துறை அதாவது பொதுப்பணித்துறைக்குச் சொந்தமான இடம். கடைகள் அமைக்கப்படும் இடத்துக்கும் அறநிலையத்துறைக்கும், நகராட்சிக்கும் எந்த சம்மந்தமும்மில்லை. கடைகள் வைக்க அந்த இடத்துக்கு டெண்டர் விடவேண்டும், வரிவசூல் செய்ய வேண்டும் என்றால் நீர்வளத்துறையோ, பொதுப்பணித்துறையோ தான் செய்யவேண்டும்.
நீர்நிலை பகுதிகளில் தற்காலிக கடை வைக்க நீர்வளத்துறை அனுமதி வழங்கமுடியாது. அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அறநிலையத்துறை ஏலம் விட்டு பணம் பார்த்து வருகிறது என்கிறார்கள்.