மக்கள் நீதி மய்யத் தலைவரும், நடிகருமான கமலஹாசன், இரண்டாம் கட்டத் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளார். காஞ்சிபுரத்தில் தொடங்கியவர் டிசம்பர் 21-ஆம் தேதி மதியம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் நகரில் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு, பொதுமக்களைச் சந்தித்தல் என பிசியாகக் காணப்பட்டார்.
அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசும்போது, "தன்மானம் உள்ளவர்கள் தான் கூட்டமாகச் சேர்ந்துள்ளோம். எனது மரியாதையை நான் பார்த்துக்கொள்ள வேண்டும், அதன் முதல் அடி நேர்மை தான். தமிழ்நாட்டின் துரோகம் இழைப்பவர்களுக்குக் கிடைக்கப்போகும் முதல் அடி நேர்மைதான். நான் சொல்வதற்கு எல்லாம் பதில் சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள். நான் நேர்மையாக இருக்க வேண்டும் எனக் காட்டுகிறேன், எங்கே கொஞ்சம் நேர்மையைக் காட்டுங்களேன். எதைக் கேட்டாலும் மத்தியில் இருந்து நிதி வரவில்லை என்கிறார்கள், நீங்கள் எடுத்துக்கொண்டு போன நிதியை எடுத்தாலே எல்லாத் திட்டமும் செய்துவிடலாம்.
எங்கள் கட்சி நிர்வாகிகளைப் பாருங்கள். இதோ சிம்பிளாக நிற்கிறார்கள். இவர்கள் வெற்றி பெற்றால் எம்.எல்.ஏக்களாக இருக்கமாட்டார்கள். நேர்மையாக எளிமையாக உங்களுடன் இருப்பார்கள். இவர்கள் தொடர்ந்து என் கருத்துகளை எடுத்துக் கொண்டுவந்து மக்களான உங்களைச் சந்திப்பார்கள். தேர்தலை முன்னிட்டு மக்களுக்காக, 7 அம்சத் திட்டத்தை மக்கள் நீதி மய்யம் அறிவிக்கிறது. இல்லத்தரசிகளுக்கு அரசு சம்பளம் வழங்குவது எல்லாம் நடக்குமா என யோசிக்கிறார்கள், நிச்சயம் நடக்கும்.
என்னிடம் வருமானவரி கட்டியதற்கான ஆதாரம் உள்ளதா எனக் கேட்கிறார்கள். அதை, என்னைக் கேட்பவர்களிடம் கேட்கிறேன். பிக்பாஸில் நிறைய சம்பளம் தருகிறார்கள், வாங்குகிறேன். தேநீர் நிலையம் வைத்துக் கொண்டு இருந்தவர். இப்போது பணத்தில் புரண்டுகொண்டு இருக்கிறார். யாருமே நினைத்துப்பார்க்க முடியாத பணம்.
என் கட்சியில் இருந்து வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், சரியாகச் செயல்படவில்லை என்றால், பதவியை ராஜினாமா செய்வேன் என்கிற ஒப்பந்தத்தோடுதான் என் பின்னால் வருவார்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஊழலே இருக்காதா எனக் கேட்டால், நிச்சயம் இருக்காது. மேல்மட்டத்தில் நாங்கள் வாங்கவில்லை என்றால், கீழ்மட்டத்தில் அதிகாரிகள் வாங்கமாட்டார்கள், அவர்களை நாங்கள் திருத்திவிடுவோம்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 'திண்டிவனம்–நகரி' இரயில் பாதை வேகமாகச் செயல்படுத்தப்படும். செய்யார் 'சிப்காட்' வளாகத்தில், மேலும் புதிய தொழிற்சாலைகள் உருவாகும், பாலாறு மணல் கொள்ளை தடுத்து நிறுத்தப்படும், இது மக்களின் சொத்து" இவ்வாறு கூறினார்.