மதுரை வந்துள்ள அமைச்சர் உதயநிதி எய்ம்ஸ் வளாகத்தை ஆய்வு செய்ய வேண்டும் என ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசுகையில், ''மதுரை வந்த உதயநிதி ஸ்டாலின் ஒற்றைச் செங்கல்லை காட்டி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு விளம்பரம் தேடினார். ஆனால் இன்றைக்கு அவர் மதுரையில் இருக்கிறார். அவருக்கு நேரம் கிடைக்குமேயானால், மக்கள் மீது அக்கறை இருக்கும் என்றால் அருகாமையில் தான் எய்ம்ஸ் வளாகம் இருக்கிறது. நான் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த பொழுது அந்த இடம் நிலம் அரசுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதை ஆய்வு செய்ய வேண்டும்.
ஏனென்றால் அறிவிக்கப்படாத முதலமைச்சராக அவர்தான் இருக்கிறார். அண்டை மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்களும், துணை முதலமைச்சர்களும் அவரை வந்து சந்திக்கிறார்கள். எனவே அவர் இதுகுறித்து ஒரு ஆய்வு மேற்கொண்டால் வளர்ச்சி ஏற்படும் என்று நான் நினைக்கிறேன். இந்த மூன்று ஆண்டுகால ஆட்சியைப் பார்த்தால் நமக்கே நெஞ்சைப் பதைபதைக்க வைக்கிறது. கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதையெல்லாம் திசைத்திருப்ப பல்வேறு முயற்சிகள் நடைபெறுகிறது.
இது எங்கே போய் முடியுமோ தெரியவில்லை. தமிழ்நாடு சுடுகாடாக மாறிவிடும் போல் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை பராமரிக்க வேண்டிய காவல்துறைக்கே பாதுகாப்பில்லா சூழ்நிலையில், இதில் அக்கறை செலுத்த வேண்டிய முதலமைச்சர் அமெரிக்காவில் சைக்கிள் ஓட்டிக்கொண்டு பாட்டுப் பாடினால் சட்ட ஒழுங்கு சரியாகிவிடுமா? போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தி விட முடியுமா? தொழில் முதலீடுகளை கொண்டு வர முடியுமா? இதெல்லாம் விளம்பர அரசியலாக தான் இருக்கிறது'' என்றார்.