கரோனா காலத்திற்குப் பிறகு டிஜிட்டல் முறைகளில் பணம் செலுத்துவதற்கு மக்கள் பெரிதும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் நியாய விலைக் கடைகளிலும் க்யூ ஆர் கோட் மூலம் பண பரிவர்த்தனை மேற்கொள்ளும் முறையைத் தமிழக அரசு அறிமுகம் செய்ய உள்ளது.
இது தொடர்பாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கூறியதாவது, நியாய விலைக்கடைகளில் கூகிள் பே, பேடிஎம் போன்ற வசதிகளில் பணம் செலுத்தும் முறைகள் அறிமுகம் செய்யப்படும் எனவும் முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 கடைகளை மாதிரி நியாய விலைக்கடைகளாக மாற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஓரிரு தினங்கள் முன் அரிசி அடைக்கப்படும் சாக்குப் பைகளில் க்யூ ஆர் கோட் அச்சிடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அண்டை மாநிலங்களுக்கு அரிசிகள் கடத்தப்படுவது தடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தினங்கள் முன் நிர்மலா சீதாராமன் "இணைய வழி பணப் பரிமாற்றம் மக்களால் இலவசமாகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த இணைய வழி பணப்பரிமாற்றத்தில் அதிக வெளிப்படைத் தன்மையை நம்மால் அடைய முடியும். எனவே, யூபிஐ சேவைக்கான கட்டணம் நியமிக்கும் எண்ணம் தற்போது இல்லை" எனக் கூறியது குறிப்பிடத்தக்கது.