தமிழக அரசின் சார்பில் சென்னையில் கடந்த ஜனவரி மாதம் 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டது. இதில் முன்னெப்போதும் இல்லாத அளவாக ரூ. 6,64,180 கோடி முதலீடு மற்றும் 26,90,657 நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு என்ற வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடர்ச்சியாக முதலீடுகளை ஈர்க்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளிநாடு செல்வதற்கு அமைச்சரவையின் ஒப்புதல் பெற வேண்டியது தேவை ஆகும்.
இந்நிலையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் ஆகஸ்ட் 13 ஆம் தேதி (13.08.2024) காலை 11 மணிக்கு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து அமைச்சர்களும், தலைமை செயலாளர் மற்றும் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மேலும் இந்த கூட்டத்தில் அரசின் கொள்கை முடிவுகள் குறித்தும், அமைச்சர்களின் செயல்பாடுகள், புதிய திட்டங்களை அறிவிப்பது குறித்தும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பெறப்பட்ட முதலீடுகளுக்கான அடுத்தகட்ட ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின் போது தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சட்டப்பேரவையில் பேசுகையில், ‘முதலீடுகளை ஈர்ப்பதற்காகத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ளார்’ எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.