தமிழ்நாடு அரசு சார்பில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காதது; மசோதாக்களைக் கிடப்பில் போடுவது; அரசின் முக்கிய முடிவுகளில் தன்னிச்சையாகச் செயல்படுவது; அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்குவதாக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய நிலையில், அவரே அந்த முடிவைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்தது போன்ற செயல்கள் மூலம் ஆளுநர், அரசின் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்த முயல்வதாகத் தமிழ்நாடு அரசின் சார்பில் குற்றம் சாட்டப்பட்டு வந்தது.
அதனைத் தொடர்ந்து சில நாள்களுக்கு முன் விருதுநகர் மாவட்டத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, “சமூகநீதி என்ற பெயரில் இந்த சமூகத்தைப் பிளவுபடுத்துகிறார்கள்” என்று தமிழக அரசைக் குற்றம்சாட்டிப் பேசினார். அது அப்போது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருவதாகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் நந்தனார் குருபூஜை விழா இன்று நடைபெற்றது. இதற்காக நேற்று இரவு கடலூர் வந்த தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்தார். இந்த குருபூஜை விழா முடிந்த பிறகு பூணூல் அணியும் விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய ஆர்.என். ரவி, “தமிழகத்தில் சாதிய பாகுபாடுகள் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமல்லாமல், குற்றச் செயல்களும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
தமிழகத்தில் பட்டியலின பெண் ஒருவர் ஊராட்சி தலைவராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் பட்டியலினத்தவர் என்பதால் இரண்டு ஆண்டுகள் ஆகியும் அவரால் பதவியேற்க முடியவில்லை. மேலும், தமிழகத்தில் அதிகபட்சமான வழக்குகளில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவதே இல்லை. பாலியல் வன்கொடுமை வழக்குகளில் 7 சதவீத குற்றவாளிகள் மட்டுமே தண்டிக்கப்படுகின்றனர்” என்று கூறினார்.