தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடலூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட அணுக்கம்பட்டு, ஆலப்பாக்கம் ஆகிய இடங்களில் மழையால் சேதமடைந்த வேளாண் பயிர்களையும் பாதிப்படைந்த நெடுஞ்சாலைகளையும் பார்வையிட்டார். தொடர்ந்து காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் வடிகாலான வெள்ளியங்கால் ஓடையைப் பார்வையிட்டார். பின்னர் திருநாரையூர் கிராமத்தில் வெள்ள தடுப்பு பணிகளை ஆய்வு செய்தார்.
இதனைத் தொடர்ந்து சிதம்பரத்தில் சேதமடைந்த இளமையாக்கினார் கோவில் குளக்கரை, சாலியன் தோப்பில் மழையால் சேதமடைந்த நெல்வயல்கள், பயிர் வகைகளைப் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து வல்லம்படுகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். அப்போது அவர் பேசுகையில், “கடலூர் மாவட்டத்தை ‘நிவர்’ மற்றும் ‘புரவி’ புயல்கள் தாக்கியுள்ளன. இதனால் மாவட்டத்தில் மிகக் கனமழை பெய்துள்ளது.
அதிக இடங்களில் நெல், வாழை, கரும்பு, கடலை உள்ளிட்ட பயிர்கள் பாதிப்படைந்தது. எனது உத்தரவின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் பாதுகாப்பு மீட்புப் பணிகளை மேற்கொண்டது. பல இடங்களில் சாலைகள் சேதம் அடைந்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பியுள்ளது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். மாவட்டத்தில் அதிக மழை பெய்ததால் பல இடங்களில் இன்னும் தண்ணீர் வடியாமல் உள்ளது. கடலூர் மாவட்டத்தில், கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய பகுதிகளில் மிகக் கனமழை பெய்துள்ளது.
நிவர் புயல் பாதிப்பை கடலூர் மாவட்டத்தில் மத்தியக் குழு பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது. சென்னையில் நடந்த கூட்டத்தில் அவர்களிடம் பாதிப்புக்கான தொகையைக் கேட்டுள்ளோம், அது கிடைக்கும் என்று நம்புகிறோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீட்டை வழங்கும்” என்றார். இவருடன் அமைச்சர்கள் சண்முகம், தங்கமணி, சம்பத், எம்.எல்.ஏ.க்கள் பாண்டியன், முருகுமாறன், சத்யா பன்னீர்செல்வம், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு அதிகாரி ராஜேஷ், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாக மூரி மற்றும் உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.