Published on 01/05/2020 | Edited on 01/05/2020
தமிழகத்தின் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, விரைவாக குணப்படுத்தும் மருத்துமனையாக மாறியுள்ளது. ஏனென்றால் கடந்த இரண்டு வாரத்தில் இங்கு இருக்கும் கரோனா நோயாளிகள் எல்லோரும் குணப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். இது எப்படி சாத்தியம் ஆனது !
கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த கரோனா தொற்று உடையவர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்கள் சந்தேகப்படும்படியான நோய் உள்ளவர்கள் என 300 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.
இதில் 183 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் திண்டுக்கல் மாவட்டம் 80, நாமக்கல் 61, கரூர் 42 என 183 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.
கரூர் மாவட்டத்தில் 42 கரோனா தொற்று நோயாளிகள் குணமடைந்து அனைவரும் வீடு திரும்பியுள்ளனர். தற்போது திண்டுக்கல் 6, நாமக்கல் 8 என 14 நபர்கள் மட்டும் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த 95 வயது மூதாட்டி உள்பட 5 பேர் கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் ஆனார்கள்.
"கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களை சேர்ந்த கரோனா தொற்று அறிகுறி மற்றும் தொற்று உள்ளவர்கள் என 300 பேர் சிகிச்சை பெற்று வந்தனர். இவர்களில் கரூர் மாவட்டத்தை சேர்ந்த 114 பேர், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் என 119 பேருக்கு கரோனா தொற்று இல்லையென்பதால் வீடு திரும்பியுள்ளனர்.
கரூரில் இப்படி சிகிச்சை அளித்து குணமான பலர் அண்டை மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கரூரில் மொத்தம் 120 பேர் கரூரில் கரோனாவில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கடைசியாக ஒரு பெண் கரூர் மருத்துவமனையில் இருந்து குணப்படுத்தப்பட்டார். இதன் மூலம் அந்த மாவட்டம் கரோனா இல்லாத மாவட்டமாக மாறியுள்ளது.
கடந்த இரண்டு வாரத்தில் மிக சரியான திட்டமிடல் மூலம் கரூர் இந்த சாதனையை செய்துள்ளது. முக்கியமாக கரோனா காரணமாக தொடக்கத்திலேயே கரூர் அரசு மருத்துவமனையில் பெட்கள் தயார் செய்யப்பட்டு இருந்தது.
அரசு மருத்துவர்கள் எனும் ஹீரோக்கள்தான் இந்த சாதனைக்கு முழுக்க முழுக்க சொந்தக்காரர்கள். கரூர் அரசு மருத்துவமனை பணியாளர்கள் இதில் ஒருபடி மேலே. கரோனா தாக்குதல் ஏற்பட்டால் உடனே மிக துரிதமான சிகிச்சை அளித்து சரியான கண்காணிப்பு கொடுத்து நோயாளிகளை குணப்படுத்தி உள்ளனர். நோயாளிகளின் உணவு முறையில் தீவிரமாக கவனம் செலுத்தி இருக்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் அன்பழகனின் சரியான திட்டமிடலும், ஆதரவும், கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மருத்துவர் ரோஸி வெண்ணிலா, கூடுதல் முதல்வர் மருத்துவர் தரணி ராஜன் மற்றும் மருத்துவர்கள் பெரிய அளவில் ஊக்குவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் ஒத்துழைப்பும், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பால்தான் கரூர் மாவட்டம் இவ்வளவு சீக்கிரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளது.