மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு வாய்ப்பளித்துவிடாமல் வழக்கைத் திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்த அவரது அறிக்கை: ‘’ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு அனுமதிக்க வேண்டுமென்று வேதாந்தா குழுமம் தொடுத்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நேற்று இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. நிர்வாகப் பணிகளுக்காக ஆலையைத் திறப்பதற்கு அது அனுமதி வழங்கியுள்ளது. இது தங்களுக்குக் கிடைத்த வெற்றியென்று ஆலை நிர்வாகம் கூறியுள்ளது. சரியான முறையில் வாதிடாமல் ஆலை நிர்வாகத்திற்கு தமிழக அரசு துணை போகின்றதோ என்ற அய்யம் நமக்கு ஏற்படுகிறது. எந்த விதத்திலும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கு தமிழக அரசு அனுமதிக்க கூடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழலுக்கு எந்த வகையில் பாதிப்பு ஏற்படுகிறது என்ற ஆதாரங்களைத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. அப்படி தாக்கல் செய்யாமல் போனால் ஆலை செயல்படுவதற்கு பசுமை தீர்ப்பாயம் அனுமதி அளிக்கக் கூடிய ஆபத்து உள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான அரசாணை வெளியிடப்பட்ட போது போதுமான ஆதரங்களோடு விரிவான முறையில் அரசாணை வெளியிடப்பட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எல்லா எதிர்கட்சிகளுமே வலியுறுத்தினோம். ஆனால், தமிழக அரசு அதைப் பொருட்படுத்தவில்லை இப்போது வழக்கு விசாரணை செல்லும் திசையைப் பார்த்தால் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு உதவி செய்வதற்காகத்தான் தமிழக அரசு அத்தகைய குறைபாடுடைய அரசாணையைப் பிறப்பித்ததோ என்ற அய்யம் வலுப்படுகிறது. பசுமைத் தீர்ப்பாயத்தின் நேற்றைய உத்தரவுக்கு தடை வாங்கிட தமிழக அரசு உடனே உத்தரவிட வேண்டும். மீண்டும் ஆலையைத் திறப்பதற்கு வாய்ப்பளித்துவிடாமல் வழக்கைத் திறமையான வழக்கறிஞர்களைக் கொண்டு நடத்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம்.’’