தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புப் பணிக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர்.
இதனைத் தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்குவது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று (09-12-23) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். இந்த நிவாரணத் தொகையை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்கப்படும். வெளியூரிலிருந்து சென்னைக்கு வேலைக்கு வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணத் தொகை வழங்க முடிவு செய்துள்ளது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெரும்பாலான ஏடிஎம்கள் வேலை செய்யவில்லை எனப் புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. அதனால், இந்த நிவாரணத் தொகை ரூ. 6,000 ரொக்கமாக வழங்கப்படவுள்ளது. இந்த புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும்’ என்று விளக்கம் அளித்துள்ளது.