மின்சாரத்துறை கேங்மேன் பணிக்கான நியமன முறைகேடு தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால், 5 ஆயிரம் கேங்மேன் பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு, நேரடி நியமனம் செய்யப்பட்டது. இதில், மின் கம்பங்களில் ஏறுதல், மின் பொருட்களை தூக்கிக்கொண்டு ஓடுவது போன்ற உடல் தகுதித் தேர்வில் தோல்வி அடைந்த பலரிடம் சில தொழிற்சங்கங்கள் பணம் பெற்றுக் கொண்டு பணி வழங்கியதாகக் கூறப்படுகிறது. கேங்மேன் பணிக்கு இவ்வாறு தேர்தெடுக்கப்பட்டவர்களில் 80 சதவீத பேர் தகுதியில்லாதவர்களாக இருப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, கேங்மேன் பணிக்கான ஆட்கள் தேர்வில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதால், தொடர்புடைய மின்துறை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட தொழிற்சங்கங்கள் மீது சிபிஐ விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி, தமிழ்நாடு மின்சார வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் தரப்பு, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
இந்த வழக்கு நீதிபதி ரவிசந்திரபாபு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தொழிலாளர்கள் தொடர்பான விவகாரம் என்பதால், சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் முறையிட மனுதாரருக்கு அறிவுறுத்தப்பட்டது.