Skip to main content

தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா; தமிழக காங்கிரஸ் கண்டனம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Tamil Nadu Congress condemns Karnataka government on Cauvery issue

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

இந்த நிலையில் கர்நாடக அரசுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நீரை ஆண்டுதோறும் குறுவை சாகுபடிக்காக தண்ணீரை திறக்க வேண்டிய ஜூன் 12 ஆம் தேதி திறக்காத காரணத்தால் டெல்டா விவசாயிகள் நிலத்தடிநீரை பயன்படுத்தி கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி 12 ஆம் தேதியில் இருந்து ஜூலை மாதம் இறுதிவரை நாளொன்றுக்கு 1 டி.எம்.சி. காவிரி நீரை திறந்து விட வேண்டும் என கர்நாடக அரசை அறிவுறுத்தியிருக்கிறது. ஆனால் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஜூலை மாதம் வரை 1 டி.எம்.சி. நீரை திறந்துவிட முடியாது என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆணையின் படி மிக மிக குறைந்த நீரை தான் வழங்கும்படி கோரியிருந்தது. அந்த குறைந்தபட்ச நீரை கூட கர்நாடக அரசு தர மறுப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. இந்த போக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை உதாசீனப்படுத்துகிற செயலாகும். 

காவிரி நீர் பங்கீட்டின்படி தமிழகத்திற்கு ஜூன் மாதம் ஏறத்தாழ 9 டி.எம்.சி.யும், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி.யும் ஆக மொத்தம் 40 டி.எம்.சி. தண்ணீர் பெறுகிற உரிமை நமக்கு இருக்கிறது. ஆனால் இதுவரை 4.6 டி.எம்.சி. தான் கர்நாடக அரசு கடந்த 10 ஆம் தேதி வரை வழங்கியிருக்கிறது. இதன்படி ஏற்கனவே 19.3 டி.எம்.சி. தரவேண்டிய நீர் நிலுவையில் இருக்கிறது. இதுகுறித்து காவிரி ஒழுங்காற்றுக் குழு குறிப்பிடாமல் பொதுவாக 12 ஆம் தேதியில் இருந்து நாள் தோறும் 1 டி.எம்.சி. வீதம் ஜூன் 31 ஆம் தேதி வரை வழங்க வேண்டும் என்று கூறியிருப்பது மிகுந்த ஏமாற்றத்தை தருகிறது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் குறைந்தபட்சமாக ஒரு நாளைக்கு 1 டி.எம்.சி. திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை மறுக்கிற வகையில் கர்நாடக அரசின் முடிவை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்க விரும்புகிறேன். தண்ணீர் பற்றாக்குறையில் குறுவை சாகுபடியை நிறைவு செய்யாமல் இருக்கும் சிரமமான நிலையை கர்நாடக முதலமைச்சர் புரிந்துகொண்டு காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை நிறைவேற்ற மறுக்கும் கர்நாடக அரசின் நடவடிக்கை குறித்து பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மௌனம் காத்து வேடிக்கை பார்க்கிறது. கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தை புறக்கணித்து வந்த ஒன்றிய பாஜக அரசின் நடவடிக்கை தமிழகத்தின் மீது அக்கறை இல்லை என்பதையே உறுதி செய்கிறது. எனவே காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் ஆணையை நிறைவேற்ற பிரதமர் மோடி உடனடியாக தலையிட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்