கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது. அதே சமயம் தொடர் கனமழை எதிரொலியாக குடியிருப்பு பகுதிகள், சாலைகள், ரயில் நிலையம் என அனைத்து இடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து முதல்வர் மு.க. ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுப் பேசுகையில், “மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ரேஷன் கார்டுகளுக்கு தலா ரூ.6 ஆயிரம் வழங்கப்படும். மழையால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கும் நிவாரணம் ரூ. 4 லட்சத்திலிருந்து ரூ. 5 லட்சமாக உயர்த்தப்படுகிறது. தென்காசி, கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு ரேஷன் அட்டைகளுக்குத் தலா ரூ.1,000 வழங்கப்படும்” என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், தென் மாவட்ட மக்களை மீட்பதில் தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் இருப்பதாகத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, “பெருமழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்ட மக்களின் உடல்நலனை உறுதி செய்திட அமைச்சர் மா. சுப்பிரமணியன் மேற்பார்வையில் 2,500க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
அதேபோல் உழவர்களின் வாழ்வாதாரங்களை மீட்டெடுத்து அவர்களது நலன் காத்திட அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் களப்பணியில் ஈடுபட்டுள்ளார். அதோடு 6 நாட்களாக 10 பொறுப்பு அமைச்சர்களும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் களத்தில் இருந்து மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதை உறுதிசெய்து வருகின்றனர். மேலும், தலைமைச் செயலாளரும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தங்கியிருந்து அரசு அதிகாரிகளுடன் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒருங்கிணைத்து வருகிறார். அந்த வகையில் தென் மாவட்ட மக்களை மீட்டெடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது” என்று குறிப்பிட்டிருந்தார்.