இந்த ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கலின் போது, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வியை மெருகேற்ற ‘தமிழ்ப் புதல்வன்’ என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் மாதம்தோறும் மாணவர்களுக்கு ரூ.1000 வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். 3.28 லட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயனடையும் இந்த திட்டத்திற்கு ரூ.360 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘தமிழ் புதல்வன்’ திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவை அரசு கல்லூரியில் இன்று (09-08-24) தொடங்கி வைத்தார். அப்போது அவர் மாணவர்கள் முன்னிலையில் பேசியதாவது, “தமிழ்நாடு தான் நமது இந்திய நாட்டிற்கே முன்னோடியாக விளங்குகிறது. மகளிருக்கு விடியல் தரும் வகையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதே போல், பெண்கள் பேருந்தில் கட்டணமில்லாமல் செல்லும் வகையில் விடியல் பயணம் திட்டத்தை உருவாக்கி கொடுத்துள்ளோம். மேலும், ‘நான் முதல்வன்’ திட்டத்தில் 26 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சியளித்து வேலை வாய்ப்பு பெறுவதையும் உறுதி செய்துள்ளோம்.
இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உருவாக்கப்பட்ட திட்டம் தான் ‘தமிழ் புதல்வன்’ திட்டம். ஏழை, எளிய மாணவர்களை சாதனையாளர்களாக உருவாக்கும் நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. கலை கல்லூரிகள், பொறியியல், மருத்துவ படிப்பு, சட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு இந்த திட்டம் பொருந்தும். பள்ளிக் கல்வி முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி படித்தே ஆக வேண்டும். ஒரு மாணவர் கூட திசைமாறாமல் பள்ளிக் கல்வி முடித்து உயர்கல்விக்குச் செல்ல வேண்டும். தமிழ் புதல்வன் திட்டம் போன்ற திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உலகளவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்க வேண்டும். தடங்கலை உடைத்து எறிந்து மாணவர்கள் முன்னேற திராவிட மாடல் அரசு துணை நிற்கும். வெற்றி ஒன்றே மாணவர்களுக்கு குறியாக இருக்க வேண்டும். உங்கள் மேல் நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை விட நான் அதிக நம்பிக்கையை வைத்திருக்கிறேன்” எனப் பேசினார்.