![Mother, son arrested for cannabis selling](http://image.nakkheeran.in/cdn/farfuture/CithgvmD0veOPQmrxTkcUjwih3Fx2nX2pQI8JYBbMHA/1648881586/sites/default/files/inline-images/th_1968.jpg)
தமிழக முழுவதும் கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கும் பொருட்டு டி.ஜி.பி. சைலேந்திரபாபு 2.0 ஆப்ரேஷன் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேபோன்று நேற்று முன்தினம் விழுப்புரத்தில் மூன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் கஞ்சா மற்றும் போதைப்பொருள் நடமாட்டங்களை தடுக்கும் பொருட்டு தீவிர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
அதனடிப்படையில் ஆப்ரேஷன் 2.0, உத்தரவுப்படி கள்ளக்குறிச்சி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கள்ளக்குறிச்சி காவல் நிலைய போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர் பாரதி தலைமையிலான போலீஸார் சங்கராபுரம் பகுதியில் தீவிர வாகன சோதனை நடத்தினர். அப்போது சங்கராபுரம் பகுதியில் இருந்து கள்ளகுறிச்சி நோக்கி வந்த இருசக்கர வாகனங்கள் இரண்டை மடக்கி சோதனை செய்தனர். அதில் அவர்கள் 1150 கிலோ கஞ்சா கடத்திச் செல்லப்பட்டது தெரியவந்தது. உடனடியாக கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.
விசாரணையில் சங்கராபுரம் அடுத்த சேஷசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயராமனின் மனைவி இளையராணி (44), அவரது மகன் தினகரன் (24), மற்றும் அவர்களது இன்னொரு மகன் பரத், அவரது நண்பர் பார்த்திபன் ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து மொத்த விலைக்கு கஞ்சாவை வாங்கி வந்து கள்ளக்குறிச்சி பகுதியில் சில்லரை விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.