தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசு ஊழியர்கள் சென்னையில் தொடர்மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக நீடிக்கும் இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது,
தமிழகத்தில் புதிய ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு 15 ஆண்டுகளுக்கு மேலாகி விட்ட நிலையில் அது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பது இதுவரை விளக்கப்படவில்லை. அது தொடர்பான கணக்கு வழக்குகளும் அரசு ஊழியர்களிடம் காட்டப்படவில்லை. இதற்கெல்லாம் மேலாக பல ஊழியர்கள் ஓய்வூதியம் பெறாமலேயே ஓய்வு பெற்றுவிட்டனர்.
இதுதொடர்பான அரசு ஊழியர் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பற்றி ஆராய ஓய்வுபெற்ற கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி புதியக்குழு அமைக்கப்பட்டது. அதன் பதவிக்காலம் கடந்த நவம்பர் மாதத்துடன் முடிவடைந்த நிலையில் மேலும் ஒரு மாத நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன் பிறகும் குழு அறிக்கை தாக்கல் செய்ததா? அக்குழு தொடர்கிறதா? என்பது குறித்த எந்த அறிவிப்பும் இல்லை. அதனால் தான் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீண்டும் போராடத் தொடங்கியுள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தால் அரசு ஊழியர்களுக்கு ஏற்பட்ட மன உளைச்சல் கொஞ்ச நஞ்சமல்ல. பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று கடந்த 2011ஆம் ஆண்டு முதல் கூறி வரும் அதிமுக அரசு, கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக அநத வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருகிறது.
அரசு ஊழியர்கள் அவர்களின் கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் நடத்தும்போது, அது தொடர்பாக அவர்களை அழைத்துப் பேசுவது தான் சரியான அணுகுமுறையாகும். மாறாக போராட்டம் நடத்தும் பணியாளர்களை கைது செய்வது எந்த வகையிலும் பயனளிக்காது. மாறாக போராட்டத்தையும் சிக்கலையும் பெரிதாக்கவே வகை செய்யும்.
எனவே, அடக்குமுறைகளை கைவிட்டு, அரசு ஊழியர் சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேசி அவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.