மாற்றுத்திறனாளி வீரர்களுக்கான 17வது பாராலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஆகஸ்ட் 28ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 4 ஆயிரத்து 400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி பதக்கங்களை பெற்று வருகின்றனர். அவனி லேகரா, மோனா அகர்வால், பிரீத்தி பால் , நிஷார் குமார்ஜே, சுமித் அண்டில் எனத் தொடர்ந்து இந்திய வீரர்கள் பதக்கங்களைக் குவித்து வருகின்றனர்.
இந்த ஒலிம்பிக் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் பதக்கங்களை வென்று அசத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை துளசிமதி முருகேசன் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். அதே மகளிர் ஒற்றையர் பிரிவு பேட்மிண்டனில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸ் வெண்கலப் பதக்கம் வென்றார்.
இதனை தொடர்ந்து, இன்று (03-09-24) தமிழகத்தைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவன் வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பேட்மிட்டன் போட்டியில் இந்தோனேசிய வீராங்கனை ரினா மர்லினாவை 21-14, 21-26 என்ற செட் கணக்கில் வீழ்த்தி தமிழகத்தைச் சேர்ந்த நித்ய ஸ்ரீ சிவன் என்ற வீராங்கனை வெண்கலப் பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாரா ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பாராலிம்பிக் 2024 இல் பெண்கள் ஒற்றையர் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நித்ய ஸ்ரீ சிவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் மகத்தான திறமை, ஆர்வம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை உங்களின் சாதனை வெளிப்படுத்தியுள்ளது. நீங்கள், எங்கள் அனைவரையும் பெருமைப்படுத்தியுள்ளீர்கள்’ எனப் பதிவிட்டுள்ளார்.