கரோனா பரவுதலைத் தடுக்கவும், அதிலிருந்து பாதுகாக்கவும் பல்வேறு மருத்துவ முயற்சிகளை மக்களிடம் எடுத்து வருகிறது தமிழக உள்ளாட்சித் துறை! இந்த நிலையில், 'முகக் கவசங்கள் கூட எங்களுக்குக் கிடைப்பதில்லை' என்கிற புகார்கள் சென்னையின் குடிசைப்பகுதி மக்களிடமிருந்து மாநகராட்சி அதிகாரிகளிடம் குவிந்தபடி இருந்தன.
இதனை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றனர் உள்ளாட்சி துறை அதிகாரிகள். இது குறித்து முதல்வர் எடப்பாடியுடன் விவாதித்த அமைச்சர் வேலுமணி, "சென்னையிலுள்ள குடிசைப் பகுதி மக்களுக்கு இலவசமாக முகக் கவசம் வழங்க முடிவு செய்துள்ளோம்" எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட குடிசைப் பகுதிகளில் வாழும் 26 லட்சம் மக்களுக்கும் இலவசமாக முகக் கவசத்தை நாளை முதல் வழங்குகிறார் அமைச்சர் வேலுமணி. ஒரு நபருக்கு 2 முகக் கவசங்கள் வழங்க ஏற்பாடு செய்திருக்கிறது உள்ளாட்சித் துறை.
இதற்கிடையே, 'முகக் கவசம் கிடைப்பதில்லை; அப்படியே கிடைத்தாலும் அதிக விலைக்கு வாங்க வேண்டியதிருக்கிறது' என்கிற புகார்களும் அதிக அளவில் இருப்பதால், தனியங்கியில் முகக் கவசம் பெறும் திட்டத்தைக் கொண்டுவந்துள்ளார் வேலுமணி.
முதல் கட்டமாக, தூத்துக்குடி மாநகராட்சியில் தானியங்கியில் முகக் கவசம் பெறும் திட்டம் துவக்கப்பட்டுள்ளது. 5 ரூபாயைத் தானியங்கி இயந்திரத்தில் செலுத்தினால் முகக் கவசம் கிடைக்கும்.
தூத்துக்குடியில் துவக்கப்பட்டிருக்கும் இந்தத் திட்டத்தை அனைத்து மாநகராட்சிக்கும் விரிவுபடுத்த அதிகாரிகளுடன் விவாதித்துள்ளார் வேலுமணி .