புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் - கரம்பக்காடு முத்துமாரியம்மன் கோவில் பிரமாண்ட ராஜகோபுரத்துடன் திருப்பணி கடந்த சில வருடங்களாக நடந்து வரும் நிலையில், வைகாசி 26 ந் தேதி குடமுழுக்கு செய்ய நாள் குறிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று காலை கோயிலுக்குச் சென்ற சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் திருப்பணிக் குழுவினர் மற்றும் கிராம மக்களிடம் ரூ.30 லட்சம் திருப்பணிக்காக நிதி வழங்கினார்.
செரியலூர் - கரம்பக்காடு கோவில் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு அடுத்த நிகழ்ச்சிக்குச் சென்ற போது கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகரில் (நரிக்குறவர் குடியிருப்பு ) ஒரு திருமணத்திற்காக மைக்செட் பாடியதோடு, பந்தல் போடப்பட்டு பதாகையும் வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாகச் சென்ற அமைச்சர் மெய்யநாதன திடீரென அந்த குடியிருப்புக்குள் சென்று மணமக்களை அழைத்து வாழ்த்தியதுடன் பரிசும் வழங்கினார். தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டு உடனே குறைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.
'நாங்கள் அழைப்பிதழ் கொடுக்காமலேயே அவர் படம் போட்டு பதாகை வைத்திருந்தோம். ஆனால் அமைச்சர் மெய்யநாதன் எங்கள் பகுதிக்கு வந்து எங்கள் மணமக்களை வாழ்த்தி எங்கள் மக்களின் குறைகளைக் கேட்டது ரொம்ப சந்தோசமா இருக்கிறது'' என்றனர் அப்பகுதி மக்கள். அமைச்சருடன் பேரூராட்சி தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட பலரும் இருந்தனர்.