மத்திய அரசு கடந்த தீபாவளி அன்று பெட்ரோல், டீசல் மீதான வரியைக் குறைத்து அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5ம், டீசல் லிட்டருக்கு ரூ. 10ம் குறைத்திருந்தது. அதேசமயம், மாநிலங்களும் தங்கள் மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என மத்திய அரசு கோரிக்கை வைத்திருந்தது. அதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் பல மாநிலங்களில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரி குறைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியைக் குறைக்க வேண்டும் என பாஜக மற்றும் தமிழ்நாடு எதிர்க்கட்சி ஆகியவை தொடர்ந்து வலியுறுத்திவருகின்றன. மேலும், தமிழ்நாடு அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும் என, தமிழ்நாடு பாஜக இன்று (22ஆம் தேதி) முதல் தொடர்ந்து 8 நாட்களுக்கு ஆர்ப்பாட்டங்களை நடத்தும் என அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார். அதன்படி இன்று பாஜக சார்பில் தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
அந்தவகையில், திருச்சி காந்தி மார்க்கெட் எம்.ஜி.ஆர். சிலை முன்பு, திருச்சி மாநகர் மாவட்ட இளைஞரணித் தலைவர் வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், ‘பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைத்த பின்னும் மாநில அரசு குறைக்கவில்லை’ என கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், திருச்சி மாநகர் மாவட்டத் தலைவர் ராஜசேகர், புறநகர் மாவட்டத் தலைவர் அஞ்சாநெஞ்சன் உட்பட அக்கட்சியினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.