தமிழ் மொழிக்கும் அய்யன் திருவள்ளுவர் பல்வேறு சிறப்புகளைச் சேர்த்தவர் கலைஞர்
- திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் புகழாரம்
திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (02-09-2017) மும்பையில், அய்யன் திருவள்ளுவர் சிலையைத் திறந்து வைத்து ஆற்றிய உரை விவரம்:
விழாமேடையில் அமர்ந்திருக்கும் பல்வேறு கட்சிகளின் முன்னோடிகளே, நிர்வாகிகளே, முன்னாள் இன்னாள் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களே, மும்பை திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளே, மும்பை வாழ் தமிழ்ப் பெருங்குடி மக்களே, பெரியோர்களே, தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். அய்யன் திருவள்ளுவர் அவர்களின் சிலைத் திறப்புவிழா நிகழ்ச்சி, 89 ஆம் ஆண்டுப் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் தேவதாசன் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நானும் உங்களோடு இணைந்து பங்கேற்கும் வாய்ப்பினை பெற்றமைக்கு மகிழ்ச்சியடைகிறேன். இங்கு உரையாற்றியவர்கள் எல்லாம் ஒன்றை குறிப்பிட்டுச் சொன்னார்கள், நீங்கள் வந்திருப்பதால் நாங்கள் பெருமைப்படுகிறோம் என்றார்கள். அவர்களுக்கு மட்டுமல்ல, அதைக் கேட்டுக் கொண்டிருந்த உங்களுக்கும் நான் சொல்லிக் கொள்ள விரும்புவது, இந்த நிகழ்ச்சியால் எனக்கும் பெருமை கிடைத்திருக்கிறது. அந்த உணர்வோடு தான் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருக்கிறேன்.
தமிழ்நாட்டில் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பை ஏற்று, என்னுடைய கடமையை நான் நிறைவேற்றி வருகிறேன். இங்கே பேசிய சட்டமன்ற உறுப்பினர் தமிழ்ச்செல்வன் அவர்கள் குறிப்பிட்டு சொன்னார், “எதிர்க்கட்சித் தலைவராக நீங்கள் இங்கு வந்திருந்தாலும், முதலமைச்சருக்கு உரிய ப்ரோட்டோகால் உங்களுக்கும் இருக்கிறது”, என்றார். ஆனால், தமிழ்நாட்டில் இன்றைக்கு முதலமைச்சர் இருக்கிறாரா? இல்லையா என்பது ஒரு கேள்விக்குறி. ஒருவர் அப்படி இருக்கிறார் என்றால் அவர் குதிரை பேரத்தின் மூலம் முதலமைச்சராக இருந்து கொண்டிருக்கிறார். மீரான் அவர்கள் கூட சொன்னார், “மிக விரைவிலே மாற்றம் வரும்”, என்றார்.
தமிழகத்தில் இருப்பவர்களை விட, மற்ற மாநிலங்களில் இருக்கும் தமிழ் மக்கள் மிக ஆவலாக ஒரு மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நான்கூட, பல நிகழ்ச்சிகளில் குறிப்பிட்டுச் சொல்வதுண்டு. திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் கொல்லைப்புறமாக ஆட்சிக்கு வருவதை விரும்பியது கிடையாது. அப்படி வரும் ஆட்சிகளால், நிலையான ஆட்சியையும் தந்துவிட முடியாது. ஜனநாயகத்திற்கு விரோதமாக திமுக என்றைக்கும் செயல்பட்டது இல்லை. அப்படித்தான், தலைவர் கலைஞர் நம்மை வளர்த்திருக்கிறார்கள். ஒரு மாற்றம் வரவேண்டுமென நீங்களும், தமிழகத்தில் இருப்பவர்களும் எதிர்நோக்கிக் காத்திருக்கின்ற வேளையில், நிச்சயம் மாற்றம் வரத்தான் போகிறது. அது ஆண்டுக்கணக்கிலா, அல்லது மாதக்கணக்கிலா அல்லது இந்தப் பயணத்தை முடித்துவிட்டு தமிழ்நாட்டிற்குச் சென்று கொண்டிருக்கும் போதேவா, இல்லை நான் பேசிக் கொண்டிருக்கும்போதே மாற்றம் வருமா என்பது மட்டும் தெரியாது.
இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. காரணம் அந்தநிலையில் தான் தமிழ்நாட்டில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆட்சியில் இருந்தால் மக்களுக்காக பணியாற்றுவோம், ஆட்சியில் இல்லையெனில் ஆட்சியில் இருப்பவர்களை பணியாற்ற வைக்கின்ற வேலையில் ஈடுபடுவோம். பேரறிஞர் அண்ணா கொட்டுகின்ற மழையிலே ராபின்சன் பூங்காவிலே இந்த இயக்கத்தை தொடங்கிய போது ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னார், “உழைக்கின்ற மக்களுக்காக, ஒடுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக இந்த இயக்கம் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிடினும் பாடுபடும்”, என்றார். அப்படிப்பட்ட இந்த இயக்கத்தை, அவருடைய மறைவிற்குப் பிறகு, அவருடைய இதயத்தை இரவலாகப் பெற்ற தலைவர் கலைஞர் அவர்கள் வீருநடைபோட்டு நடத்திக் கொண்டிருக்கிறார்.
இன்றைக்கு மும்பை மாநிலத்தில் திமுக தொடங்கிய காலகட்டத்தில், அதில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு, எல்லோரும் பாரட்டக்கூடிய போற்றக்கூடிய இந்த இயக்கத்தின் முன்னோடியான திரு. தேவதாசன் அவர்களுக்கு 89 வது பிறந்தநாள் விழா. நான் காலையிலே தனிப்பட்ட முறையிலே அவரைச் சந்தித்து வாழ்த்து சொன்னாலும், இந்த மேடையில் நடுநாயகனாக விளங்கிக் கொண்டிருக்கும் தேவதாசன் அவர்களுக்கு உங்கள் அனைவரின் சார்பிலும், தலைவர் கலைஞர் அவர்களின் சார்பிலும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துவதற்கு எனக்கு தகுதி இருக்கிறதா? காரணம் வயது. அவர் இந்த இயக்கத்திற்காக செய்திட்ட பணிகள் ஒரு காரணம். அவருக்கு வாழ்த்து சொல்கிற நேரத்தில் நாமும் அவரிடம் வாழ்த்து பெறுகிறோம் என்றுதான் எண்ண வேண்டும்.
தமிழகத்திலே இடைவிடாமல் கழக பணி, தொகுதி பணி, மக்கள் பணிகளை கவனித்து வந்தாலும், இதுபோல், மும்பை போன்ற இன்னொரு மாநிலத்திற்கு வருகிறபோது ஒரு ஓய்வு கிடைக்கும் என்ற எண்ணத்தில் தான் தேதி வழங்குவது உண்டு. ஆனால், விமான நிலையத்தில் கிளம்புகிற போது, எங்களை வருத்தத்தில் ஆழ்த்துகிற செய்தி வந்தது. இப்போது நிகழ்ச்சியை முடித்துவிட்டு, மிக விரைவாக நான் அரியலூர் செல்ல இருக்கிறேன்.
இன்றைக்கு மக்களிடத்தில், இளைஞர்களிடத்தில், மாணவர்களிடத்தில், முதியோர்களிடத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது ஒரு அசைக்க முடியாத நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது எனச்சொன்னால், காரணம் நம்மை இயக்கிக் கொண்டிருக்கும் தலைவர் கலைஞர் மீது கொண்ட நம்பிக்கை தான். இந்தச் சிலையை திறந்து வைப்பதில் ஒரு அளவுகடந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது. நேற்று முன்தினம் ஈரோட்டிற்கு சென்று ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் சிலையும், அவரால் உருவாக்கப்பட்ட தலைவன், வங்க கடலோரம் ஆறடி சந்தன பேழையில் உறங்கியும் உறங்காமல் இருக்கும் அறிவுலக மேதை பேரறிஞர் பெருந்தகை, ஈராயிரம் ஆண்டுகள் நம்முடைய அன்னைத் தமிழகம் தவமிருந்துப் பெற்றெடுத்த தலைமகன், சிங்க நடைகொண்ட புரட்சி நடையை தன் தமிழால் கொண்ட கோமான், தென்னாட்டு காந்தியாக பேரறிஞர் பெருந்தகையாக அறிஞர் அண்ணாவாக மறைந்தும் மறையாமல் இருக்கும் பேரறிஞர் அண்ணா ஆகிய இவர்களெல்லாம் இல்லையென்று சொன்னால், இன்றைக்கு நாம் நாட்டிலே சுயமரியாதையோடு, தன்மானத்தோடு உலவிக் கொண்டிருக்க முடியாது.
அப்படிப்பட்ட இருபெரும் தலைவர்களின் திருவுருவச் சிலைகளைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இன்றைக்கு உலகப் பொதுமறையாம் திருக்குறளை நமக்குத் தந்த அய்யன் திருவள்ளுவரின் சிலையைத் திறந்து வைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருப்பதை எண்ணி பெருமைப் படுகிறேன். திருவள்ளுவருக்கு நாம் செய்யும் இந்த மரியாதை தமிழ்மொழிக்கு நாம் புகழ் சேர்த்துக் கொண்டிருப்பதற்கு சமம். தமிழ் மொழியின் சிறப்பு எல்லை கடந்து நிறுவப்பட்டு இருக்கிறது. அண்மையில் அரித்துவாரில் அய்யன் வள்ளுவன் சிலை திறக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இப்படி மற்ற மாநிலங்களிலும், உலக நாடுகளிலும் நம்மால் அதைப் பார்க்க முடிகிறது. இந்தியா முழுவதற்குமான சொத்தாக திருவள்ளுவர் விளங்கிக் கொண்டிருக்கிறார். எங்கெல்லாம் தமிழர்கள் வாழ்கிறார்களோ, அவர்களுக்கு எல்லாம் ஒட்டுமொத்த சொந்தமாக திருவள்ளுவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதனால் தான் திருக்குறளை உலகப்பொதுமறை என்று நாம் சொல்கிறோம்.
அப்படிப்பட்ட வள்ளுவரின் சிலையை இங்கே சிறப்பாக செய்து முடித்திருக்கின்ற நம்முடைய தேவதாசனுக்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நம்முடைய தேவதாசன் அவர்கள் தமிழ் மொழி, கட்சிப் பணியென, சிறப்பான பல பணிகளை செய்திருக்கிறார். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், கல்வித் தந்தையாக இன்றைக்குக் குழந்தைகளுக்கு கல்வி ஆசானாக விளங்கிக் கொண்டிருக்கிறார். 1951 இல் முதன்முதலில் மும்பைக்கு வந்த தேவதாசன் அவர்கள், 1952 இல் தமிழ் மன்றத்தைத் தொடங்கி தமிழுக்கு சேவையாற்றி இருக்கிறார். இவருக்கு ஆக்கமும் ஊக்கமும் அளித்தவர் யாரென்று கேட்டால், முத்தமிழ் காவலர். கி.ஆ.பெ.விஸ்வநாதன். ஒரேயொரு விஷயத்தை மட்டும் இங்கே சொல்கிறேன்.
திருமண நிகழ்ச்சி நடந்தால், அந்த மணமக்கள் பெரியவர்களிடத்தில் வாழ்த்து வாங்குவதுண்டு. அப்போது பெரியவர்கள், “பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழுங்கள்”, என வாழ்த்துவார்கள். அதன் பொருள் என்னவெனில், 16 செல்வங்களைப் பெற்று வாழுங்கள் என்பது. இப்போதெல்லாம் சிலர் அதைத் தவறாகப் புரிந்து கொள்வதால் யாரும் அப்படி வாழ்த்துவதில்லை. அதன் பொருளை முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ.விஸ்வநாதன் ஒரு நூலில் குறிப்பிட்டார். 16 செல்வங்கள் என்பது, ‘மாடு, மனை, மனைவி, மக்கள், கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம், நிலம், நீர், வயது, வாகனம், பொன், பொருள், போகம், புகழ்’ ஆகியவை என்றுக் குறிப்பிட்டுள்ளார். அவர் வழியில் நம்முடைய தேவதாசன் தமிழ் மொழிக்காகவும், அதன் வளர்ச்சிக்காகவும் தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்டு, தொடந்துப் பணியாற்றிக் கொண்டிருப்பதை உணர முடிகிறது.
திருவள்ளுவர் மன்றத்தின் தொடக்கவிழா 1965ல் நடைபெற்றது. இந்த ஆண்டு நமக்கு ஒரு வரலாற்றை நினைவுப்படுத்துவது. நம்முடைய தாய்மொழியாம் தமிழ் மொழியைக் காப்பாற்றும் உச்சகட்டப் போராட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்ற ஆண்டு 1965. தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி 1967ல் அமைய எத்தனையோ காரணங்கள் இருந்தாலும், அந்தப் போராட்டத்தின் எழுச்சி தான் முக்கிய காரணமாக அமைந்தது.
கலைஞர் இன்றைக்கு பலவாறுப் போற்றுகிறோம். சட்டமன்றத்தில் அவரது 60 ஆண்டுகாலப் பணிகளை நினைவுப்படுத்தி, வைரவிழா கொண்டாடினோம். அவரால் தொடங்கப்பட்ட முரசொலியின் 75 ஆண்டுகாலம் நிறைவை முன்னிட்டு பவளவிழா கொண்டாடினோம். இப்படிப்பட்ட சரித்திர வரலாற்றைப் பெறுவதற்கு அடிப்படையாக அமைந்தது, அவர் தன்னுடைய பள்ளிப் பருவத்தில், கால் சட்டையணிந்த மாணவனாக, திருவாரூர் தெருவில் வில், கயல், புலி அமைந்த தமிழ்க்கொடி ஏந்தி, தனது பொதுவாழ்வைத் தொடங்கியவர்.
தமிழகத்தில் உள்ள எங்களையும், மகாராஷ்டிரத்தில் உள்ள உங்களையும் தமிழ் மொழி இணைத்துக் கொண்டிருப்பதற்கு உதாரணமாக இந்த நிகழ்ச்சி அமைந்திருக்கிறது. ஆக, இன்றைக்கு அய்யன் திருவள்ளுவரின் திருவுருவச்சிலை மும்பையில் உங்களின் சார்பில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், குறிப்பாக கலைஞர் சார்பில் என்னுடைய கரங்களால் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரு மாநிலங்களுக்கு மட்டுமல்லாமல், கர்நாடக மாநிலத்துக்கும் இணைப்புப் பாலம் அமைத்திருப்பது தமிழ் மொழிதான்.
பெங்களூருவில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகியும், அதனைத் திறக்க முடியாமல் ஒரு கோணியில் மூடி வைக்கப்பட்டிருந்தது. அதைத் திறப்பதில் பல தடைகள் ஏற்பட்டன. கலைஞர் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தபோது, கர்நாடகத்தின் முதல்வராக பிஜேபியின் சார்பில் எடியூரப்பா பொறுப்பேற்ற நேரத்தில், கொள்கைகளில் வேறுபாடுகள், மாறுபாடுகள் இருந்தாலும், மாநிலங்களுக்கு இடையிலான நட்பின் அடிப்படையில், கலைஞர் ஒரு திரைப்படத்தின் வசனம் எழுத பெங்களூரு சென்றிருந்தபோது, எடியூரப்பா மரியாதை நிமித்தமாக கலைஞர் சந்தித்தார்.
அப்போது கலைஞர் திருவள்ளுவர் சிலைத் திறக்கப்படாமல் இருப்பதைச் சுட்டிக்காட்டியது, எடியூரப்பா அவர்கள் ஒரு கோரிக்கையினை முன்வைத்தார். கர்நாடகாவின் பிரபல கவிஞர் சர்வ்ஞ்யர் என்பவரது பாரம்பரியம் வடசென்னையில் இருந்திருக்கிறது. எனவே, கன்னட மொழி பேசும் மக்கள் வடசென்னையில் அவரது சிலையை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதை தலைவர் கலைஞர் எடுத்துச் சொன்னதன் அடிப்படையில், இருவரின் சிலைகளையும் திறப்பதென முடிவெடுத்து, “கர்நாடகாவில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலையை நான் வந்து திறந்து வைக்கிறேன், அதேபோல சென்னையில் அமைக்கும் கன்னட கவிஞர் சர்வஞ்சர் சிலையினை நீங்கள் வந்து திறந்து வையுங்கள்”, என்று நட்புடன் பேசி, முடிவெடுக்கப்பட்டு, 2009ல் அந்த சிலைகளின் திறப்பு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் பேசியபோது, ”சிலையைப் பார்க்கின்ற நேரத்தில் அய்யன் திருவள்ளுவரின் பொன்மொழிகள் மற்றும் கன்னட கவிஞரின் பொன்மொழிகளும், அறிவுரைகளும் எனது நினைவுக்கு வருகின்றன. அதை அனைவரும் ஆழமாகப் பதியவைத்துக் கொள்ள வேண்டும்”, என்றுக் குறிப்பிட்டார். இதை இங்கு நான் சுட்டிக்காட்டக் காரணம் என்னவெனில், திருக்குறளில் அத்தனைப் பொன்மொழிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டின் வரலாறுகள் சங்க நூல்களில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மரபையும், தத்துவங்களையும் தெரிந்து கொள்ள திருக்குறள் உதவுகிறது. தமிழினத்தின் அடையாளங்களைத் தாங்கியுள்ள இந்த இலக்கியங்கள் உலக அரங்கில் பெருமைக்குரிய சின்னங்களாக உள்ளன. திருக்குறளின் பெருமைகளை ஒவ்வொரு தமிழரும் அறிந்து வைத்திருக்க வேண்டியது மட்டுமல்ல, அனைவருக்குமான நீதி நூலாக திருக்குறள் அமைந்திருப்பதை, தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு எடுத்துச் சொன்னார்கள்.
கலைஞர் 5 முறை தமிழக முதலமைச்சராக இருந்த ஒவ்வொரு ஆட்சியிலும் எத்தனையோ சாதனைகள், திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு இருந்தாலும், தமிழ் மொழிக்காக, தமிழறிஞர்களுக்காக, தமிழ் புலவர்களுக்காக, தமிழ் மொழி மேலும் பல சிறப்புகளைப் பெற்றாக வேண்டும் என்பதற்காக, எத்தனையோ பணிகளை அவர் நிறைவேற்றி இருக்கிறார். அவற்றில் சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
· 1953ல் கலைஞர் திருச்சி சிறையில் கைதியாக இருந்தார். ஊழல் செய்தோ, கொள்ளையடித்தோ, பெங்களூரில் இருப்பவர்கள் போல் அல்ல. மக்களுக்காகப் போராடி, விலைவாசி உயர்வு, மொழிப்போராட்டம் போன்றவற்றில் ஈடுபட்டு அவர் சிறைக்குச் சென்றார். அப்படிச் சென்றபோது, திருச்சி சிறைக்குள் திருக்குறள் மன்றம் தொடங்கி அங்கிருக்கக்கூடிய கைதிகளுக்கு எல்லாம் திருக்குறள் வகுப்பை நடத்தியிருக்கிறார்.
· சட்டமன்றத்தில் எல்லா தலைவர்களின் படங்களும் இடம்பெற்றுள்ளன. திருவள்ளுவர் சிலையை சட்டமன்றத்தில் வைக்க வேண்டும் என முதன் முதலில் 1963ல் குரல் கொடுத்த தலைவர் யார் என்றால் நம்முடைய கலைஞர்.
· அந்தக் கோரிக்கை 1964ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அன்றைய குடியரசுத் தலைவர் ஜாகீர் உசேன் அவர்கள் தமிழக சட்டமன்றத்துக்கு வந்து திருவள்ளுவரின் திருவுருவப் படத்தைத் திறந்து வைத்தார்.
· மைலாபூரில் திருவள்ளுவர் சிலை இருப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம். அது, கலைஞர் சீரிய முயற்சியால் சென்னை மாநகராட்சியின் சார்பில் 1966ல் திறந்து வைக்கப்பட்டது. அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் அந்தச் சிலையைத் திறந்து வைத்தார்.
· அதேபோல, 1967ல் பேரறிஞர் அண்ணா தலைமையில் திமுக ஆட்சிக்கு வந்து, அந்த அமைச்சரவையில் கலைஞர் பொதுப்பணித்துறை அமைச்சராக பொறுபேற்று, போக்குவரத்துத் துறையும் அந்த இலாகாவில் இணைக்கப்பட்டு இருந்தபோது, அரசு பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தை வைத்தது மட்டுமல்லாமல், பேருந்துகளில் திருக்குறள்கள் இடம்பெற உத்திரவிட்டார்.
· கலைஞர் முதல்வராகப் பொறுப்பேற்று இருந்த காலத்தில், காங்கிரஸ் கட்சி எதிர் கட்சியாக அமர்ந்திருந்தபோது, எப்போதும் துடிப்புடன் பேசக்கூடிய அம்மையார் அனந்தநாயகி எழுந்து, “திமுக ஆட்சியில் பேருந்துகளில் எல்லாம் திருவள்ளுவர் படங்களை வைத்து, திருக்குறள்களையும் எழுதி இருக்கிறீர்கள், அதில் நான் படித்த ஒரு குறள், ‘யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு’, என்று இருந்தது. இது அந்த பேருந்தின் ஓட்டுநருக்கா அல்லது நடத்துனருக்கா அல்லது பயணிகளுக்கா?”, என்றுக் கிண்டலாகக் கேட்டார்.
· கலைஞர் உடனடியாக எழுந்து, “அம்மையார் அனந்தநாயகி, ‘யாகாவராயினும் நாகாக்க காவாக்கால் சோகப்பர் சொல்லிழுக்கப் பட்டு’, என்ற திருக்குறள் யாருக்குப் பொருந்தும் என நல்ல கேள்வியைக் கேட்டிருக்கிறார். நாக்கு யாருக்கெல்லாம் இருக்கிறதோ, அவர்களுக்கெல்லாம் அக்குறள் பொருந்தும்”, என்றார்.
· அதுபோலவே, தமிழ்நாட்டில் உள்ள எல்லா சுற்றுலா மாளிகைகளிலும், விடுதிகளிலும் திருவள்ளுவர் படம் இருக்க வேண்டும், திருக்குறள் எழுதப்பட்டு இருக்க வேண்டும் என்று உத்திரவிட்டார்.
· அதன் பிறகு, 1969ல் கலைஞர் முதல்வராக இருந்தபோது, தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் பொங்கல் விழாவிற்கு அடுத்த நாள் திருவள்ளுவர் தினம் கொண்டாட வேண்டும் என்று உத்திரவிட்டு, அந்த நாளை, அரசு விடுமுறை நாளாக அறிவித்தார்.
· அதேபோல, தமிழக காவல்துறையினருக்கு ஆண்டுதோறும் நன்னடத்தையை பாராட்டி பதக்கங்கள் வழங்குவதுண்டு. அந்தப் பதக்கத்தில் திருவள்ளுவர் திருவுருவம் இடம்பெற வேண்டும் என்று கலைஞர் சட்டம் கொண்டு வந்தார்.
· எல்லாவற்றுக்கும் மேலாக ஒன்றைக் குறிப்பிட வேண்டுமென்றால், பல்வேறு மாவட்டங்கள், பல்வேறு மாநிலங்கள், நாடுகளில் இருந்து சென்னைக்கு சுற்றுலா வரும் பயணிகள் அனைவரும் வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட்டு விட்டுச் செல்கிறார்கள் என்றால், 1974 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு, ஏறத்தாழ இரு ஆண்டுகள் தொடர்ந்து ஒரு நாளைக்கு இருமுறை அந்தப் பணிகளை, கலைஞர் நேரில் சென்றுப் பார்வையிட்டு, அங்கு என்னவெல்லாம் இடம்பெற வேண்டும், எந்தெந்த சிலைகள் எங்கு, எப்படி, எந்த வடிவில் இடம்பெற வேண்டும், அந்தந்த வடிவங்களுக்கு, இடங்களுக்கு ஏற்ப என்னென்ன குறள்கள் இடம்பெற வேண்டும் என்பதையெல்லாம் ஆலோசித்து, அவரே திட்டமிட்டு, கிட்டதட்ட 99.75 சதவிகித பணிகள் முடிவடைந்தன. இன்னும் 0.25 சதவிகித பணிகள் மீதமிருந்து, திறப்புவிழா நடைபெறவிருந்த நிலையில், 31-01-1976 அன்று தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக் கலைக்கப்பட்டது. எனவே, திறப்புவிழா நடக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டில் யாருடைய ஆட்சியும் இல்லாமல், நெருக்கடி நிலை அமல் செய்யப்பட்டு, ஜனாதிபதி ஆட்சி இருந்த நேரத்தில், வள்ளுவர் கோட்டம் திறந்து வைக்கப்பட்டது.
· இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டுமென்றால், 1330 திருக்குறள்களுக்கும் கலைஞர் விளக்கம் எழுதி, ‘திருக்குறள் உரை’ என்ற பெயரில் புத்தகமாக வெளியானது உங்களுக்கே நன்றாகத் தெரியும், அதை மறந்திருக்க மாட்டீர்கள்.
· டெல்லி தமிழ்சங்கம் உருவாவதற்கும் கலைஞர் தான் காரணமாக இருந்திருக்கிறார்.
· அதுமட்டுமா, குமரி முனையில் 133 அடி உயரம் கொண்ட அய்யன் திருவள்ளுவன் சிலை அமைத்து, அழகுபார்த்தவரும் கலைஞர் தான்.
· நம்முடைய தாய் மொழியான அழகு தமிழ் மொழிக்கு, செம்மொழி என்ற அங்கீகாரம் பெறுவதற்கு ஆட்சியில் இருந்தபோதும், இல்லாத நிலையிலும், தொடர்ந்து குரல் கொடுத்து, போராடி, வாதாடி, செம்மொழி அந்தஸ்தைப் பெற்றுத் தந்து, தமிழ் மொழிக்கு பல்வேறு சிறப்புகளை சேர்த்தவர் கலைஞர்.
· தான் இயற்றிய ‘வான்புகழ் கொண்ட வள்ளுவர்’ என்ற நூலில் சில வரிகளைத் கலைஞர் கன்னியாகுமரியில் அமைந்துள்ள அச்சிலையைப் பற்றி குறிப்பிட்டு இருப்பது என்னவென்றால், “சோலைக்குயில் பாடும், கோலமயில் ஆடும், மோனத்தவமிருக்கும், வானத் திருமேனி, வண்ணப்பொடி தூவும் வாணவில்லாய் வளையும், நீலகடல் ஓரம் நித்தம் தவம் புரியும், குமரியல்லோ சென்றோம், குதிகுதித்து நின்றோம், இங்கு வான்முட்டும் சிலையொன்று வள்ளுவருக்கு அமைத்துள்ளோம்’, என்று குறிப்பிட்டுள்ளார்.
· அதேபோல, “சமத்துவப் பேரொலியாய், சமுதாயப் புரட்சி எனும் தத்துவமாய், பெருஞானியாய், மகத்துவம் மிகக்கொண்ட மனிதகுல திருவிளக்காய், பூமிக்கே அளித்து இருக்கும் புத்தெழுச்சி மிக்கப் புனிதன் தந்த இந்தத் திருக்குறள்”, என்றுப் பெருமையோடு, குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.
இத்தகைய பல்வேறுப் பெருமைகளைக் கொண்ட அய்யன் திருவள்ளுவருக்கு தான், இன்றைக்கு இந்த மும்பை பகுதியில், நம்முடைய தேவதாசன் அவர்களின் சீரிய முயற்சியோடு, இந்தச் சிலை அமைக்கப்பட்டு இருக்கிறது. அவருடைய பொன்மொழிகள் அத்தனையும், நம் வாழ்வில் கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. தமிழர்கள் எங்கிருந்தாலும், தமிழ் உணர்வைக் காப்பாற்றுவார்கள். தமிழ் மொழியைக் காப்பாற்றுவார்கள்.
பேரறிஞர் அண்ணா பலமுறை பல மாநிலங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் சென்றிருக்கிறார். ஒருமுறை மலேசியாவுக்கு அவர் சென்றபோது, அங்கிருந்த பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து, பல கேள்விகளை கேட்டபோது, எல்லாவற்றுக்கும் அண்ணா பதில் சொன்னார். அப்போது, “தமிழ்நாட்டில் இருக்கும் தமிழர்களுக்கும், வெளி மாநிலங்கள் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்களுக்கும் என்ன வித்தியாசம்?”, என்றுக் கேட்டார்கள். அதற்கு அண்ணா அவர்கள், “தமிழ்நாட்டில் தமிழர்கள் இருக்கிறார்கள், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள்” என்றார்.
மணப்பெண்கள் தங்கள் பிறந்த வீட்டையும் சரி, புகுந்த வீட்டையும் சரி எப்போதும் மறப்பதில்லை. அதுபோலவே, நீங்கள் தமிழ்நாட்டையும் மறப்பதில்லை, இந்த மராட்டிய மாநிலத்தையும் மறப்பதில்லை. அதாவது, பிறந்த வீட்டையும் மறப்பதில்லை, புகுந்த வீட்டையும் மறப்பதில்லை. ஆக, பிறந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்க எப்படி மணப்பெண் முயற்சிக்கிறாளோ, அதேநேரத்தில், பிறந்த வீட்டிலும் தான் புகுந்த வீட்டுக்குப் பெருமை சேர்க்க எப்படி முயற்சிக்கிறாளோ, அப்படிப்பட்ட பணியைத்தான் நீங்களும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறீர்கள்.
ஆகவே, தமிழுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் இந்த விழா நடைபெறுகிறது. கலைஞர் பல நேரங்களில் தமிழைப் பற்றி, “உளங்கவர் ஓவியமே, உற்சாகக் காவியமே, ஓடை நறுமலரே, ஒளியுதிர் புதுநிலவே, அன்பே, அமுதே, அழகே, உயிரே, இன்பமே, இனிய தென்றலே, பனியே, கனியே, பழ ரசச்சுவையே, மாணிக்கச் சுடரே, மன்மத விளக்கே என்றெல்லாம் தமிழை அழைக்கத் தோன்றுகிறது, இருந்தாலும் தமிழைத் தமிழே என்றழைப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லை”, என்று குறிப்பிடுவதுண்டு. அப்படிப்பட்ட தமிழ் மொழிக்குச் சிறப்புச் சேர்க்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதில் நான் பெருமையடைகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். அந்தப் பூரிப்புடன் இந்த விழாவை நடத்தும் அத்தனைப் பேருக்கும் எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து, வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம். இவ்வாறு மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.