கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர் பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மகாலட்சுமி. இவர், தனக்கு சொந்தமான விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் நேற்று வழக்கம்போல் தனது விவசாய நிலத்தில் விவசாயம் பார்த்து வந்தார். அப்போது, அங்கு வந்த வடமாநில இளைஞர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த அரிவாள் மனையை கொண்டு திடீரென மகாலட்சுமியின் கையில் சரமாரியாக வெட்டியதாகக் கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து, மகாலட்சுமியின் அலறல் சத்தத்தை கேட்ட அந்த ஊர் பொதுமக்கள் அங்கு ஓடி வந்தனர். கிராம மக்கள் ஓடி வருவதை கண்ட அந்த வடமாநில இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று அருகில் உள்ள ஒரு வீட்டின் மாடி பகுதியில் ஒளிந்துகொண்டார். இதனையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரை பிடிப்பதற்காக அருகில் சென்ற போது அரிவாள்மனையால் தாக்க முயன்றார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பிடிக்க முடியாமல் அந்த இளைஞரிடம், ஹிந்தி மொழி தெரிந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஒருவர், இளைஞர் அருகில் சென்று நைசாக பேச்சு கொடுத்து கூல்டிரிங்க்ஸ் கொடுத்து சமாதானப்படுத்தினார். மேலும், இளைஞர் தனது கையில் வைத்திருந்த ஆயுதத்தை சாதுர்யமாக வாங்கி அப்புறப்படுத்தினார்.
இதையடுத்து, அந்த ஊர் மக்கள் இளைஞரின் சட்டையை பிடித்து தரதரவென இழுத்து சரிமாரியாக தாக்கினர். இதில், அந்த இளைஞருக்கு ரத்த காயம் ஏற்பட்டதை அடுத்து ஆட்டோவில் ஏற்றி, அவரை அழைத்து சென்று காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதனை தொடர்ந்து, பொதுமக்கள் தாக்கியதில் காயம் ஏற்பட்டதில் அந்த இளைஞருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயம் பார்த்து வந்த பெண்மணியை வடமாநில இளைஞர் ஒருவர் அரிவாள்மனையால் தாக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.