தமிழ்நாடு முழுவதும் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 108வது ஆண்டு பிறந்தநாள் விழாவினை அ.இ.அ.தி.மு.க.வினர் கொண்டாடி வருகின்றனர். இதற்காக கட்சி ரீதியாக ஒவ்வொரு மாவட்ட கழகத்தின் சார்பில் பொதுக்கூட்டம் நடத்த பொதுச்செயலாளர் எடப்பாடி.பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதன்படி திருவண்ணாமலை கிழக்கு மாவட்டத்தின் சார்பில் திருவண்ணாமலையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் வைகைசெல்வன், மா.செ ராமச்சந்திரன் உட்பட கட்சியின் அனைத்து நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட துணை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏவான சுரேஷ்குமாரை மேடைக்கு கீழே உட்கார வைத்திருந்தனர். இது இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், விழா நடைபெறும் இடத்தின் நகர, ஒன்றிய செயலாளர்கள் அணிகளின் முக்கிய நிர்வாகிகள் மேடையில் அமரவைக்கப்படுவார்கள். ஆனால் எங்கள் மாவட்டத்தில் அப்படியே தலைகீழாக உள்ளது. மாவட்ட துணை செயலாளர் சுரேஷ்குமார் மேடைக்குக் கீழே அமரவைக்கப்பட்டார். அவர் மேடைக்கு வந்தபோது இடமில்லை எனச்சொல்லி கீழே உட்காரவைக்கப்பட்டார். மாவட்ட கழகத்தில், நகரக் கழகத்தில் எந்த பொறுப்பிலும் இல்லாத வெறும் உறுப்பினரான முன்னாள் ந.செ கனகராஜ் மனைவி ஞானசௌந்தரி மேடையில் உட்காரவைக்கப்பட்டு இருந்தார். கட்சியின் நிர்வாகி கீழே உட்கார வேண்டும், கட்சி உறுப்பினர் மேடையில் உட்காரவைப்பது எந்த விவத்தில் சரியானது. அந்த பெண்மணி மீது கொலைக் குற்ற வழக்கு உள்ளது. அப்படியிருந்தும் அவரை மேடையில் உட்கார வைக்கிறார்.
இதற்கு காரணம் சாதி தான். சுரேஷ்குமார் பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதாலே அவர் அவமதிக்கப்பட்டுள்ளார். மற்றொரு துணை செயலாளரான சில்பி.சகானா மேடையில் அமரவைக்கப்பட்டார். நகரத்தில் உள்ள சாதாரண நிர்வாகிகள் கூட மேடையில் அமர்ந்திருந்தனர். சுரேஷ்குமார் மாவட்ட துணை செயலாளர் மட்டுமல்ல, செங்கம் தனி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ, இதற்காகவாவுது மரியாதை தந்திருக்க வேண்டும், அதற்குக்கூட மரியாதை தரவில்லை. அப்படியாயின் சாதி பார்த்து மேடையில் உட்காரவைத்தார்கள் என்பதுதானே உண்மை என்கிறார்கள். தனது சாதியை சேர்ந்தவர் என்பதால் கட்சியில் அடிப்படை உறுப்பினர் தவிர வேறு எந்த பொறுப்பிலும் இல்லாத கனகராஜ் மனைவி ஞானசௌந்தரியை மேடையில் உட்காரவைத்துள்ளார் மா.செ ராமச்சந்திரன். இது எப்படி சரியாகும்? சுரேஷ்குமாருக்கு மட்டுமல்ல எங்கள் கட்சியில் தொடர்ச்சியாக சாதி ரீதியிலான அரசியல் நடந்து வருகிறது, பட்டியலின நிர்வாகிகள் மட்டுமல்ல, சாதி ரீதியாக நிர்வாகிகள் தொண்டர்களையும் ஒதுக்கும் போக்கு இங்கு நிலவி வருகிறது என குற்றம்சாட்டினார்கள்.
இதுகுறித்து மா.செ ராமச்சந்திரன் ஆதரவாளர்களோ, அவர் மேடையின் கீழே உட்கார்ந்தது அவருக்கு தெரியாது, இது சாதாரணமாக நடந்தது எனக் கடந்து செல்கிறார்கள். அது எப்படி தெரியாமல் போகும், இதையெல்லாம் ஏமாற்றும் வேலை என்கிறார்கள் எதிர் தரப்பினர். மாவட்ட துணை செயலாளருக்கு நடந்த அவமானம் குறித்தும், மா.செவின் சாதி ரீதியிலான அரசியல் குறித்து இ.பி.எஸ்க்கு புகார் அனுப்பி வைத்துள்ளனர் கட்சியினர்.