கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, கண்ணகி கோயில் திருவிழா நடைபெறாத நிலையில், இந்த ஆண்டு நடைபெற்றது. இக்கோயிலானது தமிழக- கேரள மாநிலங்களின் எல்லைப் பகுதியான தேனி மாவட்டம், குமுளி அருகே அமைந்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தின் தேனி மாவட்ட நிர்வாகம், கேரளாவின் இடுக்கி மாவட்ட நிர்வாகம் செய்தது. பக்தர்கள் கேரளாவின் குமுளியில் இருந்து 18 கிலோ மீட்டர் தூரம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பகம் வனப்பாதை வழியாக நடந்தும், ஜீப் மூலமாகவும், சென்று வருகின்றனர்.
அதேபோல் தமிழகத்தின் தேனி மாவட்டம் லோயர்கேம்ப் பளியங்குடியில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் இருந்து ஆறு கிலோ மீட்டர் தூரம் நடந்தும் கண்ணகி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான குடிநீர், உணவு, போக்குவரத்து, மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் தேனி மற்றும் இடுக்கி மாவட்ட நிர்வாகங்கள் சார்பில் செய்யப்பட்டுள்ளன.
மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை சார்பாகவும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. சுமார் 1,500- க்கும் மேற்பட்ட இரு மாநில போலீசார் பாதுகாப்பு பணியிலும், இரு மாநில வனத்துறையினர் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டிருந்தனர். மங்கலதேவி கோட்டத்தில் அலங்கரிக்கப்பட்ட கண்ணகி அம்மன் பச்சை நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
தமிழக- கேரள மாநிலத்தை சுமார் 30,000- க்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று கண்ணகி அம்மனை வழிபட்டனர். அதே நேரத்தில் வருடத்தில் மூன்று நாட்கள் கொண்டாடப்பட்ட கண்ணகி கோவில் சித்திரை முழுநிலவு திருவிழா ஒரு நாளாக மாற்றப்பட்டு; நாளடைவில் மாலை 04.00 மணி வரை இருந்த அனுமதி நேரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. தற்போது இந்த ஆண்டில் அதற்கான அனுமதி நேரம் மதியம் 02.00 மணியாக குறைக்கப்பட்டதால் பக்தர்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.
இந்த கண்ணகி கோயில் திருவிழாவுக்கு ஆண்டுதோறும் தமிழக பத்திரிக்கையாளர்களை தேனியில் உள்ள செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அழைத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு பத்திரிக்கையாளர்களுக்கு சரிவர மாவட்ட நிர்வாகமும், பி.ஆர்.ஓ.வும் ஏற்பாடு செய்யவில்லை. அதனாள் கண்ணகி கோவிலுக்கு தமிழக பத்திரிக்கையாளர்கள் வழக்கம் போல் செல்லும்போது கேரளா காவல்துறையினரும், வனத்துறையினரும் தமிழக பத்திரிக்கையாளர்களை கண்ணகி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் ஆவேசம் அடைந்த பத்திரிகையாளர்கள் குமுளியில் சாலை மறியல் போராட்டத்தில் குதித்து தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.