சேலத்தில், வடிவேலு காமெடி காட்சி போல, மோட்டார் சைக்கிளை ட்ரையல் பார்த்துவிட்டு வாங்கிக் கொள்வதாகக்கூறி, காதல் ஜோடியை பணயமாக வைத்துவிட்டு, மற்றொரு காதல் ஜோடி வண்டியுடன் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் டவுன் சாந்தி தியேட்டர் பகுதியில் 'செகண்ட் ஹேண்ட்' மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம்கள் அதிகளவில் இயங்கி வருகின்றன. இதே பகுதியில் ராம் சரண் என்பவரும் செகண்ட் ஹேண்ட் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கான ஷோரூம் நடத்தி வருகிறார்.
இவருடைய கடைக்கு ஜன. 21-ஆம் தேதி, இரண்டு இளம் காதல் ஜோடியினர் ஒரே நேரத்தில் வந்தனர். அவர்கள் அங்கிருந்த சில விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்களின் விலை நிலவரம் குறித்து விசாரித்தனர்.
இரண்டு ஜோடிகளில் ஒரு ஜோடியினர், அந்த ஷோரூமில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளைக் காட்டி, அதை வாங்க விருப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளனர். அதன் விலை குறித்து கேட்டதற்கு, 1.75 லட்சம் ரூபாய் என்று ராம் சரண் கூறியிருக்கிறார்.
இந்த விலைக்கு திருப்தி அடைந்த காதல் ஜோடி, வண்டியை ஓட்டிப்பார்த்துவிட்டு திருப்தி என்றால் பணம் கொடுக்கிறோம் என்று கூறியுள்ளது.
கடைக்காரரும், 'அதுதான் ஜாமினுக்கு இன்னொரு காதல் ஜோடியினர் இருக்கிறார்களே... போகட்டும்... எங்க போய்ட போறாங்க... எப்படிப் பார்த்தாலும் நம்மகிட்ட பணயமாக ஆளுங்க இருக்காங்களே...' என்று மைண்ட் வாய்ஸ் ஒலித்ததால், அந்த ஜோடியினர் மோட்டார் சைக்கிளை எடுத்துச்செல்ல அனுமதித்தார்.
இதுதான் வாய்ப்பு என்று கருதிய இளம்ஜோடியினர், விருட்டென்று மோட்டார் சைக்கிளில் சிட்டாய் பறந்தனர். அதுக்குள்ள அவசரமா.... சரி... இளசுங்கன்னா அப்படித்தான்... என மறுபடியும் மைண்ட் வாய்ஸ் ஒலிக்க, இன்றைக்கு நல்ல வருமானம் என்ற நம்பிக்கையில் காத்திருந்தார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் அவர்கள் திரும்பாததால் சந்தேகம் அடைந்த ராம் சரண், அங்கிருந்த காதல் ஜோடியைப் பிடித்து விசாரித்திருக்கிறார். அப்போது அவர்கள் சொன்ன பதில், அவருக்கு தூக்கி வாரிப்போட்டது.
அந்த ஜோடியோ, மோட்டார் சைக்கிளில் சென்றவர்களுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர்களைப் போல நாங்களும் செகண்ட் ஹேண்டில் மோட்டார் பைக் வாங்கத்தான் வந்தோம். அவர்கள் எப்படியெல்லாம் விலை நிலவரம் விசாரிக்கிறார்கள் என்று பார்த்துக்கொண்டு இருந்தோம் என்று கூலாக பதில் சொல்லி இருக்கிறார்கள்.
அதன்பிறகுதான் தான் ஏமாற்றப்பட்டதை கடை உரிமையாளர் ராம்சரண் உணர்ந்தார். ஆனாலும் இளம் ஜோடியினர் சொன்ன பதிலால் திருப்தி அடையாத அவர், அவர்களைப் பிடித்துச்சென்று சேலம் நகர குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். காவல்துறை விசாரணையில், மோட்டார் சைக்கிளை லவட்டிச்சென்ற காதலர்களில் இளம் பெண்ணை மட்டும் தனக்குத் தெரியும் என்று பணயமாக வைத்த காதலர்களில் ஒருவர் கூற, சேலத்தில் உள்ள பெண்ணின் பெற்றோருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரத்தில் பெண்ணின் பெற்றோர் காவல்நிலையத்திற்கு வந்தனர். அவர்களிடம் விசாரித்தபோது, மோட்டார் சைக்கிளைத் திருடிச்சென்ற வாலிபர், கிருஷ்ணகிரி மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பதும், அவர்களுடைய மகளும் பிரவீன்குமாரும் காதலர்கள் என்பதும் தெரிய வந்தது.
ஒரு தமிழ் படத்தில் வடிவேலுவைப் பணயமாக வைத்துவிட்டு, மோட்டார் சைக்கிளை ஓட்டிப்பார்த்துவிட்டு விலை பேசுவதாகச் சொல்லிவிட்டு இருவர் வண்டியை ஓட்டிச்சென்று விடும் காமெடி காட்சி இடம்பெற்றிருக்கும். அதேபோல், உடன் வந்த மற்றொரு காதல் ஜோடியை அவர்களுக்கே தெரியாமல் பணயமாக வைத்துவிட்டு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை திருடிச்சென்ற காதலர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
சினிமா பாணியில் நடந்த இச்சம்பவம் சேலம் நகர பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.