தமிழகத்தில் தீபாவளியைப் போன்று விமரிசையாகக் கொண்டாடப்படுவது, கேரளாவில் ஓணம் பண்டிகை. மகாராஜா மாவலியை வரவேற்கும் பொருட்டு ஆவணி மாத திருவோண நட்சத்திர நாளன்று கேரளா மக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பு புத்தாடை புனைந்து அத்தப் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கோலமிட்டு வரவேற்பார்கள். அதுவே ஓணம் பண்டிகையானது.
அன்றைய தினம் பாகுபாடின்றி கேரள மக்கள் வீடுகளில், 16 வகை விருந்துகள் கம கமக்கும், மாநிலமே கொண்டாட்டத்திலிருக்கும். குண்டுசி முதல் காதுகளில் அணியப்படும் தங்கத் தோடுகள் வரை வியாபாரம் அமர்க்களப்படும்.
இந்த அமர்க்களத்தைப் பயன்படுத்திக் கொண்டு தடை செய்யப்பட்ட கிக் சமாச்சாரமான புகையிலை குட்காவும் டன் கணக்கில் தமிழக பார்டரைக் கிராஸ் செய்து விடுகின்றன. கரோனா தொற்று காரணமாக நாடே பூட்டப்பட்ட லாக் டவுணிலிருக்கிறது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் மக்களுக்கு இ-பாஸ் கட்டாயம். ஆனாலும் சரக்கு வாகனங்களுக்கு கட்டுப்பாடில்லை. மேலும் கரோனாத் தொற்று அச்சம் காரணமாக சரக்கு வாகனங்கள் அவ்வளவாக நுண்ணிய சோதனைக்கு உட்படுத்தப்படுவதில்லை.
எனவே வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு கர்நாடகாவிலிருந்து தடை செய்யப்பட்ட குட்கா மூட்டைகளை, டன் கணக்கில் தமிழகத்திற்குள் நுழைந்து விடுகின்றனர். அதுபோன்று கடத்தப்பட்ட குட்கா புகையிலை நெல்லை, தூத்துக்குடி, ஆலங்குளம், சுரண்டை ஏரியாக்களில் பிடிபட்டுள்ளன. பல இடங்களில் பதுக்கியும் வைக்கப்பட்டுள்ளன. அது போன்று பதுக்கி வைக்கப்பட்டதில் சில தென்காசி மாவட்ட கேரள பார்டரான புளியரை வழியாக உள்ளே கடத்தப்பட்டும் விடுகின்றன.
நேற்று அதிகாலை கேரளா பார்டரில், ஆரியங்காவு சோதனைச் சாவடியில் கேரள போலீசார் சோதனையிலிருந்த போது, ஆற்றிங்கல் செல்வதற்காக வந்த கோழித் தீவனம் ஏற்றி வந்த வாகனத்தை சோதனை செய்தனர். மேலும், வாகனத்தில் உள்ள மூட்டைகளின் அடியில் மூட்டை மூட்டையாகக் குட்கா புகையிலை மறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கைப்பற்றிய போலீசார், வாகனத்தையும் பறிமுதல் செய்து அதன் டிரைவரான தென்காசி நகரின் இசக்கி ராஜனையும் கைது செய்தனர்.
இதுகுறித்து அறியங்காவு சோதனைச் சாவடி போலீசார் கூறுகையில், பிடிபட்ட 30 மூட்டைகளின் குட்கா மதிப்பு 25 லட்சம். மேலும், இது தமிழகத்திலிருந்து கடத்தப்பட்டதாகத் தெரிவித்த போலீசார், வழக்குப்பதிவு செய்து உயரதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
கரோனா லாக்டவுண் காலத்தில் தடை செய்யப்பட்டவைகள் கூட தாராள மயமாகியிருக்கிறது.