பிரபல தமிழ்ப்பட இயக்குநரும், ஒளிப்பதிவாளருமான கே.வி.ஆனந்த் (வயது 54) மாரடைப்பால் காலமானார்.
இயக்குநர் கே.வி.ஆனந்துக்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக, அவர் உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், இன்று (30/04/2021) அதிகாலை 03.00 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஒளிப்பதிவாளர் முதல் இயக்குநர் வரை....
மோகன்லால் நடித்த ‘தென்மாவின் கொம்பத்’ மலையாள படம் மூலம் ஒளிப்பதிவாளரானார் கே.வி.ஆனந்த். அதைத் தொடர்ந்து, தமிழில் முதல் முறையாக ‘காதல் தேசம்’ படத்துக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். அதன் தொடர்ச்சியாக, ‘நேருக்கு நேர்’, ‘முதல்வன்’, ‘விரும்புகிறேன்’, ‘பாய்ஸ்’, ‘செல்லமே’, ரஜினியின் ‘சிவாஜி’ படத்திற்கும் ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் பணியாற்றியுள்ளார். மலையாளம், தெலுங்கு, இந்தி என பல்வேறு படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கே.வி.ஆனந்த், 'கனா கண்டேன்' மூலம் இயக்குநரானார். ‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’, ‘அனேகன்’, ‘கவண்’, ‘காப்பான்’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ‘மீரா’, ‘சிவாஜி’, ‘மாற்றான்’, ‘கவண்’ ஆகிய படங்களில் நடிகராகவும் சில காட்சிகளில் கே.வி.ஆனந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இயக்குநர் கே.வி.ஆனந்த் மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.