நெல்லை மாவட்டத்தின் திசையன்விளைக் காவல் நிலைய எஸ்.ஐ.யான பிரதாப் அங்குள்ள ஒரு வங்கியினருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். முறைப்படி சீருடையில் பணியாற்ற வேண்டிய அந்த எஸ்.ஐ. அதைவிடுத்து மப்டியில் பணியிலிருந்தார். (இதனை எல்லாம் மேலதிகாரிகள் வழக்கம் போல் கண்டு கொள்ளாததுதானே)
அது சமயம் திசையன்விளைப் பகுதியின் கணேசபுரம் கிராமத்தின் வெல்டிங் தொழிலாளியான முத்துக்கிருஷ்ணன் தனது பைக்கில் வந்திருக்கிறார். அவர் வங்கிப் பக்கம் வந்தபோது சீருடையில் இல்லாத அந்த எஸ்.ஐ. அவரின் வாகனத்தை நிறுத்தும்படி சொல்ல, அவர் யாரோ எவரோ, என்ற நினைப்பில் முத்துக்கிருஷ்ணன் வேகமாகச் சென்றுவிட்டார்.
அவரைத் தன் பைக்கில் விரட்டி மடக்கிப் பிடித்த எஸ்.ஐ. பைக்கின் சாவியை பறித்து விட்டு. என்னல, போலீஸ் நிறுத்தச் சொல்லியும் நிக்காமப் போறியா என்று கேட்க. யூனிபார்ம் இல்ல எனக்குப் போலீஸ்னு தெரியுமா, என்று முத்துக் கிருஷ்ணன் பதிலுக்குக் கேட்க. அவர்களுக்குள் வாக்குவாதமாகி கைகலப்பு ஏற்பட்டது. அதில் எஸ்.ஐ.க்கு உதவியாக குண்டர் சட்டம் பாய்ந்த இடைச்சிவிளை ஜவகர், ஒரு பெண் காவலரின் கணவர் தர்மா, உள்ளிட்டோரும் சேர்ந்து முத்துக்கிருஷ்ணனை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தின் வீடியோ வைரலாகி விவகாரத்தைக் கிளப்பியது இதையடுத்து வள்ளியூர் ஏ.எஸ்.பியான ஹரிஹரன் எஸ்.ஐ.யுடன் சேர்ந்து தாக்குதல் நடத்திய தர்மா, மற்றும் ஜவகரிடம் விசாரணை நடத்தினார். ஆனால் தனது திருமணம் காரணமாக விடுப்பிலிருந்த எஸ்.ஐ. பிரதாப் விசாரிக்கப்படவில்லை. அதேசமயம் பாதிக்கப்பட்ட முத்துக்கிருஷ்ணனும் விசாரணைக்கு அழைக்கப்படவில்லையாம்.
போலீஸ் தாக்குதலால் சாத்தான்குளத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். வி.கே.புதூரில் எஸ்.ஐ. தாக்குதலால் ஒரு வாலிபர் உயிரிழந்தார். எட்டயபுரத்தில் போலீசாரின் மிரட்டலால் வாலிபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
இதற்கெல்லாம் காரணம் போலீசாருக்கு மன அழுத்தமே என்று பொது வெளியில் சொல்லிக் கொண்டாலும், அதனை நீதிமன்றத்திலேயே சொல்லியிருப்பதுதான் உச்சக்கட்ட வேதனை.
இதுகுறித்து வழக்கறிஞரும் சமூக ஆர்வலருமான பிரம்மாவிடம் பேசியபோது, மனஅழுத்தம் என்று சொல்லுவது தங்களது தவறை மறைக்க, சம்பவத்திலிருந்து தப்பிப்பதற்காகச் சொல்லப்படுவது. ஆனால் உண்மையிலேயே கடந்த இரண்டு வருடமாக ஏரியாக்கள் அந்தந்தக் காவல் போலீசாரிடம் போய்விட்டது. கேட்பதற்கு ஆளில்லை என்ற காரணத்தால் பொது மக்களிடம் இப்படி அத்துமீறுகிறார்கள். அதே சமயம் அந்தக் காவலர்களை உயரதிகாரிகள் கேட்பதில்லை. அதுமட்டுமல்ல அவர்களின் குறையைக் களைய வேண்டிய அதிகாரிகள் அதனை கேட்டு நிவர்த்தி செய்வதில்லை. உயர் அதிகாரிகளுக்கும் காவலர்களுக்கும் சமூக இடைவெளி ஏற்பட்டதின் விளைவுதான், பொதுமக்களின் மீதான காவலர்களின் அத்துமீறல்கள் என்கிறார்.
கோபதாபத்தின் உச்சிக்குப்போகும் ஒரு மனிதர், அதனை காரணமானவர்களின் மீது வெளிப்படுத்துவதில்லை. எதிர்பட்டவரிடம் இறக்கித் தீர்த்துக் கொள்வதுதானே வாழ்க்கையாகிவிட்டது.