தமிழ்நாட்டில் கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு என்ற 40 ஆண்டுகால கோரிக்கையை வலியுறுத்தி, வரலாறு காணாத அளவில், மிகப்பெரிய போராட்டத்தை நடத்த பாட்டாளிகள், பாட்டாளி இளைஞர்கள், பாட்டாளி பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தயாராக வேண்டும் என்று பா.ம.க. மற்றும் வன்னியர் சங்க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அழைப்பு விடுத்திருக்கிறார்.
சமூக நீதியை வலியுறுத்தி நடத்தப்படும் இப்போராட்டத்தை பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாமலும், அனைத்துத் தரப்பினரின் ஆதரவுடன் நடத்தி வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இத்தகைய சூழலில், 20% இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை அறவழியில் எவ்வாறு நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தை நவம்பர் 22 - ஆம் தேதி இணைய வழியில் நடத்துகிறார் டாக்டர் ராமதாஸ்.
இதுகுறித்த அறிவிப்பினை பா.ம.க.தலைவர் ஜி.கே.மணியும், வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழியும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த கூட்டுப் பொதுக்குழு கூட்டத்தில், பா.ம.க.இளைஞரணித் தலைவர் டாக்டர் அன்புமணி இராமதாஸ் உள்பட, இரு அமைப்புகளிலும் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகள் பலரும் கலந்து கொள்ள விருக்கிறார்கள். இந்த கூட்டுப் பொதுக்குழுவில் எடுக்கப்படும் முடிவுகள் ஆளும் கட்சியினருக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் என்கிறார்கள் பாமகவினர்.